

வால்பாறை: வால்பாறையில் காணப்படும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் சுற்றித் திரிவதால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க புதுத்தோட்டம் பகுதியில் வனத்துறையினர், தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து கயிற்றுப் பாலம் அமைத்து குரங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பல அரிய வகை விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில், வால்பாறை, மற்றும் மானம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள புதுத்தோட்டம், குரங்குமுடி, சின்னக்கல்லாறு, மானாம்பள்ளி, அக்காமலை புல்மேடு, ஐயர்பாடி ஆகிய வனப்பகுதிகளில் உலகில் அழிந்து வரும் விலங்குகளில் ஒன்றாக கருதப்படும் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
சிங்கவால் குரங்குகள் உலகில் 4 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கை யில் உள்ளதாக கணக்கிடப்பட்டு, அரிய வகை விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை வால்பாறை பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்புவரை உயரமான மரங்களில் வசித்து வந்தன. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களிடம் உள்ள தின்பண்டங்களை அவற்றுக்கு அளிக்க தொடங்கினர். தின்பண்டங்களின் சுவைக்கு பழகிய சிங்கவால் குரங்குகள் நாளடைவில் குடியிருப்பு பகுதிகள் நடமாடத் தொடங்கி மனிதர்களுடன் பழகிவிட்டன.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் 90-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் அடங்கிய கூட்டம் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பொள்ளாச்சி-வால்பாறை சாலையை அடிக்கடி கடந்து செல்லும் குரங்குகள், சாலையில் சுற்றித் திரியத் தொடங்கின. அப்போது வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளன.
வனத்துறையினர் மற்றும் இயற்கை பாதுகாப்பு நிறுவனம் அமைப்பினர் இணைந்து சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டனர். புதுத்தோட்டம் பகுதியில் சிங்கவால் குரங்குகள் சாலையை கடந்து செல்ல, 6 இடங்களில் மரங்களுக்கு இடையே 20 அடி உயரத்தில் கயிற்றால் பாலம் அமைத்துள்ளோம்.
பெரும்பாலான குரங்குகள் அவற்றின் வழியாக சாலையைக் கடந்து சென்று விடுகின்றன. ஒரு சில சிங்கவால் குரங்குகள் தின்பண்டங்களுக்காக சாலையில் அமர்ந்து சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அப்போது வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி இறந்து விடுகின்றன. இவற்றை காக்க இயற்கை பாதுகாப்பு நிறுவனம், பணியாளர்களை அமர்த்தி வேகமாக வரும் வாகனங்களை நிறுத்தி மெதுவாக செல்ல அறிவுறுத்தி வருகின்றது. இதனால் சிங்கவால் குரங்குகள் வாகனங்களில் சிக்கி இறப்பது குறைந்துள்ளது,’’ என்றனர்.
பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஆரம்ப காலத்தில் வால்பாறையில் சோலைக் காடுகளில் இருந்து இந்த சிங்கவால் குரங்குகள் காலப்போக்கில் நகரப்பகுதிக்குள் நுழைந்தன. புதுத்தோட்டம் பகுதியில் ஒரு காலத்தில் மிகுதியாக காணப்பட்டன. சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களை இவற்றுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். நாளடைவில் இவை மனிதர்களோடு பழகி விட்டன.
உணவு தேடி வீடுகள், கடைகள், வணிக வளாகங்களுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் சாலையைக் கடக்கும் போது, வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளதால், இவற்றை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கின்றனர். தன்னார்வ அமைப்பும் இதில் ஈடுபட்டிருக்கிறது. இக்குரங்குகள் சாலையைக் கடக்கும் சமயங்களில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, இவை கடந்தபின் அனுமதிப்பது, இவற்றுக்கு காய், கனிகள் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றனர்.