சென்னை பாம்பு பண்ணையில் 53 குஞ்சுகள் பொரித்த அமெரிக்க மலை ஓணான்கள்!

சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில் பொரித்துள்ள அமெரிக்க மலை ஓணான் குஞ்சுகள். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில் பொரித்துள்ள அமெரிக்க மலை ஓணான் குஞ்சுகள். படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: சென்னை பாம்பு பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் அமெரிக்க மலை ஓணான்கள் இந்த ஆண்டு 53 குஞ்சுகளை பொரித்துள்ளன.

இது தொடர்பாக செனனை பாம்பு பண்ணை இயக்குநர் ஜெ.பால்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தென் அமெரிக்காவை சேர்ந்தவை அமெரிக்க மலை ஓணான்கள். இவை அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில நாடுகளில் இவை செல்லப் பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றன.

சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில் அமெரிக்க மலை ஓணான் இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு பச்சை, நீலம், பழுப்பு ஓணான்கள் பராமரிக்கப்படுகின்றன. இப்பூங்காவுக்கு கடந்த 2017-ம் ஆண்டு கொடையாக வழங்கப்பட்ட ஒரு ஜோடி அமெரிக்க மலை ஓணான் மூலம் இனப்பெருக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2018-ல் மேலும் 4 ஓணான்கள் கொடையாக கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு இனப்பெருக்கம் உச்ச அளவை எட்டியுள்ளது.

தற்போது 3 பெண் ஓணான்கள், 2 ஆண் ஓணான்களை கொண்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மொத்தம் 26 ஓணான்கள் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு 2 பொரிப்பகங்கள் மூலமாக அதிகபட்சமாக 30 ஓணான் குஞ்சுகள் பொரித்தன. இந்த ஆண்டு 53 குஞ்சுகள் பொரித்துள்ளன. இது இதுவரை இல்லாத அளவாகும்.

இன்னும் ஒரு பொரிப்பகத்தில் இருந்து குஞ்சுகள் வெளிவர உள்ளன. இங்கு வழக்கமாக 80 சதவீத முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. அதில் 70 சதவீத குஞ்சுகள் சிறப்பாக வளர்கின்றன. இங்கு இனப்பெருக்கம் செய்யப்படும் ஓணான்கள் பிற உயிரியல் பூங்காக்களுக்கு கொடையாக கொடுக்கப்பட்டு வருகிறது”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in