“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை தமிழக அரசு பின்பற்றுவதில்லை” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

கோவை: ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மத்திய அரசின் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசு பின்பற்றுவதில்லை. எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மத்திய அரசுடன், தமிழக அரசு இணைந்து செயல்பட வேண்டும்’ என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்றைய நவீன உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிக மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அதிக மழை, அதிக வெப்பம் என பல்வேறு இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒரு பக்கம் வறட்சி, மற்றொரு பக்கம் மழை வெள்ளம் என பெரும் பாதிப்புகளை நம் நாடு சந்தித்து வருகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் யானைகள், புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காடுகளின் பரப்பும் அதிகரித்துள்ளது. மத்திய அரசுடன், தமிழக அரசு இணைந்து செயல்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கண்டறிந்துள்ளது. ஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசு பின்பற்றுவதில்லை.

தமிழக அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள யானை வழித்தடங்களில் நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் கிராமங்களும் உள்ளன. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த, 46 கிராமங்கள் இதில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்கள், மலையடிவார கிராமங்கள் இதில் வருகின்றன. யானைகள் வழித்தடத்தை, வலசை பாதையை காக்க வேண்டும் என்ற கடமை அனைவருக்கும் உள்ளது. அதை மக்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை.

அதேசமயம் அப்பாவி மக்களின் நிலத்தை யானை வழித்தடங்கள் என கண்டறிந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திமுக அரசு உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். யானை வழித்தடங்கள் தொடர்பாக மக்களின் இருப்பிடத்துக்குச் சென்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in