Last Updated : 20 May, 2024 04:49 PM

 

Published : 20 May 2024 04:49 PM
Last Updated : 20 May 2024 04:49 PM

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 3 நாள் யானைகள் கணக்கெடுப்பு: 37 குழுக்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள வனச்சரக பகுதிகளில் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் ஈடுபடவுள்ள 37 குழுக்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநர் மற்றும் வனஉயிரின காப்பாளர் இளையராஜா தலைமையில் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பணியாளர்களுக்கு முண்டந்துறை பயிற்சி கூட்டரங்கில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு- 2024 தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் வனப்பணியாளர்கள் 37 குழுக்களாக பிரிந்து, முண்டந்துறை வனச்சரகத்தில் 15 பிரிவுகளாகவும், பாபநாசம் வனச்சரகத்தில் 4 பிரிவுகளாகவும், கடையம் வனச்சரகத்தில் 9 பிரிவுகளாகவும், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் 9 பிரிவுகளாகவும் வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இது தொடர்பாக கணக்கெடுப்பு குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் வனச்சரக அலுவலர்கள் சத்தியவேல் (பாபநாசம்), கல்யாணி (முண்டந்துறை), கருணாமூர்த்தி (கடையம்), நித்யா (அம்பை) மற்றும் வனவர்கள், வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக உயிரியலாளர்கள் ஷ்ரிதர், அக்னஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

குரங்குகளை பிடிக்க குழு: இதனிடையே, பாபநாசம் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் அட்டகாசம் செய்துவரும் குரங்குகளைப் பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பாபநாசம் வனச்சரகம் சிவந்திபுரம் கிராமத்தில் தொடர்ச்சியாக குரங்குகள் பொதுமக்களை தாக்கி வருவதால், இது குறித்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டும், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா தரவுகளை ஆராய்ந்தும், பொதுமக்களை தாக்கும் குரங்குகளை அடையாளம் கண்டு அதனை பிடித்து வனப்பகுதிக்குள் விடும் பணியை உடனே மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் பாபநாசம் வனச்சரக வனவர் செல்வசிவா, வனக்காப்பாளர் அஜித்குமார், முண்டந்துறை வனச்சரக வனக்காப்பாளர் உலகநாதன், அம்பாசமுத்திரம் வனச்சரக வனக்காவலர் ஆரோக்கிய இருதயராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக் குழுவினர் உடனடியாக சிவந்திபுரம் கிராமத்தில் முகாமிட்டு இப்பணி முடியும்வரை அங்கேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x