

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு சில விநாடிகளில் காட்டாற்று வெள்ளம் சீறிப் பாய்ந்து வந்ததால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அதேபோல் நேற்று பழைய குற்றாலம் அருவியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தனர். அருவி அருகே மேடான பகுதிகளில் சிலர் தஞ்சம் புகுந்து கூச்சலிட்டனர். தென்காசி தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று, வெள்ளத்தில் சிக்கிய 5 பேரை மீட்டனர். வெள்ளத்தில் காணாமல் போன திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த 2 சம்பவங்களிலும் அருவிப் பகுதியில் மழை இல்லாத நிலையில் மலைப் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோல் திடீரென வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமா என்பது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தானியங்கி வானிலை நிலையம் மூலம் காற்றின் வேகம், காற்று வீசும் திசை, மழை அளவு, வெப்பநிலை போன்ற விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். தானியங்கி மழைமானி மூலம் மழை அளவு விவரத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.
தமிழக அரசு 1,400 இடங்களில் மழைமானி அமைத்து வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் மழைமானிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கான நீராதாரமாக உள்ள மலைப்பகுதியில் தானியங்கி மழை மானி வைத்தால் மழையின் அளவை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருப்பவர்கள் மழை அளவு விவரத்தை கண்காணித்து, அதிக மழை பதிவாகியிருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அருவியில் குளிப்பவர்களை வெளியேற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யலாம் என்றார்.
இதேபோல் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழும் பகுதியை விசாலமாக்கினால் நெரிசலை தவிர்க்கலாம். மேலும், தண்ணீர் விழுந்து ஓடையாக செல்லும் பகுதியில் துருப்பிடிக்காத கம்பிகளை நட்டு, சங்கிலிகள் கட்டினால் வெள்ளத்தில் சிக்கியவர்கள் தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.