

ஆனைமலை: ஆழியாறு வனப்பகுதியில் பெய்து வரும் கோடை மழையால் தடுப்பணைகள் நிரம்பின. இதனால் வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறிய தாவது: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான் காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள், மயில்கள் வசிக்கின்றன. இவற்றின் குடிநீர் தேவைக்காக ஆழியாறு, கோபால் சாமி மலை, வில்லோனி, அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட வனச் சுற்றுக்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் தடுப்பணைகள் வறண்டதால், வன விலங்குகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் தேடி இடம் பெயர்ந்தன.
இந்நிலையில், நவமலை, ஆழியாறு, காடம்பாறை, அப்பர் ஆழியாறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 9-ம் தேதி அப்பர் ஆழியாறில் 18 மி.மீ., காடம்பாறையில் 10 மி.மீ., நவமலையில் 25 மி.மீ. மழை பெய்ததால், கோபால்சாமி மலை வனப்பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பியுள்ளது.
இதனால், வன விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தியடைந்துள்ளது. வறட்சியை போக்கும் விதமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இன்னும் 2 வாரங்களில் தென் மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கிவிடும். இதனால் இனி வரும் நாட்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.