

ராஜபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை இல்லாததால் ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு நீரின்றி வறண்டு காணப்படுகிறது. ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி யாகும் அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு தேவதானம் சாஸ்தா கோயில் அருவி, தேவியாறு மற்றும் பல்வேறு காட்டாறுகள், ஓடைகள் மூலம் சாஸ்தா கோயில் அணை, 6-வது மைல் நீர்த்தேக்கம் மற்றும் கண்மாய், குளங்களுக்கு நீர் வருகிறது. இதன் மூலம் ராஜ பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியின் குடிநீர் தேவை மற் றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கோடை வெயில் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேத்தூர், தேவதானம், செட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜபாளை யத்தில் 2 மணி நேரம் கனமழை பெய்தது.
நகர்ப் பகுதியில் மழை பெய்த போதிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை இல்லாததால், மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆறு நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.