

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து பற்றி எரிந்து வந்த காட்டுத்தீ சமீபத்தில் பெய்த மழையால் கட்டுக்குள் வந்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை தொடங்கும் முன்பே அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வந்தது. அடர்ந்த காட்டுப் பகுதியில் தீப்பற்றி எரிந்ததால் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் கருகின. வன விலங்குகளும் இடம் பெயர்ந்தன. 300-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சில நாட்களாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
ஓரளவு தீ கட்டுக்குள் வந்தாலும், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று தீயை அணைப்பது சவாலாக இருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, காட்டுத்தீ முழுவதுமாக அணைந்துள்ளது. நேற்று பிற்பகலில் மேல்மலை மற்றும் கீழ்மலைக் கிராமங்களில் மழை பெய்தது.
கொடைக்கானல் முழுவதும் வனப்பகுதிகள் பசுமை இழந்து காட்டுத் தீயில் கருகிய மரங்களும், செடிகளுமாக காணப்படுகின்றன. அதே சமயம் இரண்டு நாட்களாக காட்டுத் தீ ஏற்படாததால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து, காட்டுத்தீ பிடிப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.