

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே தாழ்வான மின் ஒயரில் உரசியதில் மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, ஜளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவை பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சுற்றி வருகின்றன. தற்போது நிலவும் வறட்சியால், யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளியில் உள்ள ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு மக்னா யானை வந்தது.
அப்போது, அவ்வழியாகத் தாழ்வாக சென்ற மின் ஒயரில் யானையின் உடல் உரசியதில், மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே யானை உயிரிழந்தது. தகவல் அறிந்து நேற்று காலை அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் யானையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், நிகழ்விடத்தில் கால்நடை மருத்துவர் மூலம் பிரேதப் பரிசோதனை செய்து, யானையின் உடலை அடக்கம் செய்தனர். மேலும், தாழ்வான மின் ஒயரை உடனடியாக மின் ஊழியர்கள் உயர்த்தினர்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: ஏரியில் தண்ணீர் இருந்த போது மின் ஒயர் தாழ்வாகச் செல்வது தெரியவில்லை. ஏரி பகுதிக்கு மக்னா யானை சென்ற போது மின் ஒயர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்துள்ளது. மின் ஊழியர்கள் மூலம் தாழ்வான மின் ஒயரை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வனப்பகுதியில் வேறு பகுதியில் தாழ்வாக மின் ஒயர்கள் செல்கிறதா என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.