Published : 21 Apr 2018 10:23 AM
Last Updated : 21 Apr 2018 10:23 AM

படிப்போம் பகிர்வோம்: வேளாண்மை தெரியாதவர்களா விவசாயிகள்?

யற்கை வேளாண்மையின் அவசியத்தைப் பற்றியும் நவீன வேளாண்மை விவசாயிகளுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகங்களைப் பற்றியும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற வேளாண் அறிஞர்களின் வழிநின்று தொடர்ந்து எழுதி வருகிறார் கோவையைச் சேர்ந்த கிழார். அவர் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை ‘எங்கே செல்கிறது எங்கள் வேளாண்மை?’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது ‘பூவுலகின் நண்பர்கள்- தமிழ்நாடு, புதுச்சேரி’ அமைப்பு.

தமிழில் சங்க காலம் தொடங்கி இலக்கியம் என்பது மனிதர்களை மட்டுமல்ல; அவர்கள் வாழும் மண்ணையும் மரங்களையும் மலர்களையும் பிராணிகளையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. நமக்குச் சற்றுமுன் வாழ்ந்த பாரதிதாசன்வரைக்கும் தொடர்ந்துவந்த இயற்கை அழகின் சித்தரிப்புகள் இன்று வண்ணதாசனின் காலத்தில் நினைவுகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

இழந்துவிட்ட பாரம்பரியம்

தமிழில் பாலை நிலம் என்று நிலையாக எதுவும் இருந்ததில்லை. அவ்வப்போது பருவ மாறுதல்களால் முறைமையில் கொஞ்சம் திரிந்து, சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடக்கூடியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. அந்த இயற்கையின் சோதனையை எதிர்கொள்ளும் வகையில்தான் விவசாயமும் நடந்துவந்திருக்கிறது. கடும் வெயிலை, எதிர்பாராத மழையை, எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று அடம்பிடிக்கும் பூச்சிகளைச் சமாளிக்கும்வகையில் விதவிதமான பயிர் வகைகளைத் தமிழர்கள் பயிரிட்டுவந்திருக்கிறார்கள்.

மழையையும் நதி நீரையும் மட்டுமே நம்பியிருந்த காலத்தில்கூட அவர்களால் வெற்றிகரமாக விவசாயம் செய்ய முடிந்தது. லாப நட்டங்கள் குறித்து அவர்கள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. உணவுத் தேவைக்கும் அடுத்த அறுவடைக் காலம் வரையிலான சேமிப்புக்கும் மட்டுமானதாகவே வேளாண்மை விளங்கியிருக்கிறது.

ஆனால், 20-ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒற்றைப் பயிர் வளர்ப்பு, பணப்பயிர் சாகுபடி போன்ற வேளாண் திட்டங்கள் வேதி உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் நம்பியிருக்கும் நிலைக்கு விவசாயிகளைத் தள்ளிவிட்டன. விளைவு, இன்று மண்ணின் வளத்தையும் எந்த இயற்கைச் சவால்களையும் எதிர்த்து நின்று குறைந்தபட்ச மகசூலுக்கு உத்தரவாதம் கொடுத்த பாரம்பரியப் பயிர்வகைகளையும் இழந்துவிட்டு நிற்கிறார்கள் நம் விவசாயிகள்.

லாபம் சேர்க்கும் வாடிக்கையாளர்களா?

இயற்கைப் பாதையே சிறந்தது என்று காலம் உணர்த்தியிருக்கிறது. ஆனால், மீண்டும் பழைய பாதைக்கு அவர்கள் திரும்பிவிடக் கூடாது என்பதில் நவீன வேளாண்மை கண்ணும் கருத்துமாக இருக்கிறது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் இயற்கையிலேயே தடுப்பாற்றல் கொண்ட பயிர் வகைகளை மரபணு மாற்றங்களின் மூலம் சாத்தியப்படுத்தலாம் என்று ஆசைவார்த்தைகள் கூறப்படுகின்றன.

ஏற்கெனவே மண்வளத்தையும் அதற்குக் காரணமாக இருந்த உயிரினப் பன்மைப் பெருக்கத்தையும் இழந்துவிட்டு நிற்கிறோம். அறிவியலுக்கும் அறவியலுக்கும் பொருந்தாத இந்த நவீன வேளாண்மையும் அதை இயக்குகிற பன்னாட்டு விதை, பூச்சிக்கொல்லி, வேதி உரங்களின் விற்பனையாளர்களும் விவசாயிகளைத் தாங்கள் நடத்தும் தொழிலுக்கு லாபம் சேர்க்கிற வாடிக்கையாளர்களாக மட்டுமே நடத்துகிறார்கள்.

அனுபவமே பாடம்

வேளாண் இடுபொருட்களைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு வேளாண்மையைக் கற்றுத் தரத் தேவையில்லை. காலம்காலமாக அவர்கள் கற்றுத் தேர்ந்த அனுபவமே அவர்களுக்குப் போதுமான பாடம். மக்கள் எழுத்தில் வடித்த இலக்கியமும் வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகளுமே அதற்குச் சான்று என்பதையும் ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறார் கிழார்.

இந்நூலுக்குத் துணைநூலாக கிழார் மொழிபெயர்த்துள்ள ‘நம்பிக்கையோடு இருக்கிறேன்’ என்ற சிறுதொகுப்பையும் ‘பூவுலகின் நண்பர்கள்- தமிழ்நாடு, புதுச்சேரி’ வெளியிட்டிருக்கிறது. வேளாண் அறிஞரும் இதழாளருமான தேவீந்திர் சர்மா நவீன வேளாண்மைத் திட்டங்களின் சூழ்ச்சிப் பின்னணி குறித்து அளித்துள்ள பேட்டியும், உயிர்நுட்பவியல் வல்லுநர் புஷ்ப எம். பார்கவா, ‘எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ இதழுக்கு அளித்த பேட்டியும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கூடவே, விவசாயிகளின் பாரம்பரிய அறிவை வெளிப்படுத்தும் பழமொழிகளின் தொகுப்பு ஒன்றும் பின்னிணைப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

அனுபவத்தால் விவசாயிகள் பெற்ற அறிவை, அறிவியலின் துணையோடு மேம்படுத்துவதற்காகத்தான் அறிஞர்களின் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. பாரம்பரிய அறிவை முற்றிலும் துடைத்து அழித்துவிட்டு நிலங்களைத் திறந்தவெளி பரிசோதனைக் கூடங்கள் ஆக்குவதற்காக அல்ல.

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

எங்கே செல்கிறது எங்கள் வேளாண்மை?, கிழார், விலை ரூ. 120

நம்பிக்கையோடு இருக்கிறேன், தேவீந்திர சர்மா, பி.எம்.பார்கவா, தமிழில்- கிழார் விலை ரூ. 70, வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்- தமிழ்நாடு, புதுச்சேரி,

தொடர்புக்கு 94436 22366Sign up to receive our newsletter in your inbox every day!

 
x