

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடமுடியாதபடி சாலையின் இருபுறமும் கான்கிரீட் கொட்டி விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் முக்கியமான சாலைகள், தெருக்கள், வீதிகளில் கடந்த 1990-ம்ஆண்டு காலகட்டத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில், 5 ஆயிரம் இடங்களுக்கு மேல் மரக்கன்றுகள் நடப்பட்டு, நாள்தோறும் வாகனங்கள் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரித்து வரப்பட்டன.
இந்த மரங்கள் அனைத்தும் காலப்போக்கில் நன்றாக வளர்ந்ததால் நகரம் முழுவதும் பசுமையாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தன. வெயில் காலங்களில் பொதுமக்களுக்கு நிழலும் கிடைத்துவந்தது. பலர் இந்த மரங்களின் நிழலில் வியாபாரமும் செய்து வந்தனர்.
இந்நிலையில், வளர்ந்து வந்த மரங்கள் மின்கம்பிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி,மின்வாரியத் துறையினர் அவ்வப்போது மரக்கிளைகளை வெட்டிவந்தனர். மேலும், சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு, அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டது.
குறிப்பாக, தஞ்சாவூர் காந்திஜிசாலை, திருச்சி சாலை, புதுக்கோட்டை சாலை, வல்லம் நெ.1 சாலை, மருத்துவக் கல்லூரி சாலை,நாஞ்சிக்கோட்டை சாலை, அருளானந்த நகர் போன்ற பல்வேறுசாலைகளில் மரங்கள் அகற்றப்பட்டு, பேவர் பிளாக் டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதைகள் அமைக்கப்பட்டன.
மரங்கள் அகற்றம்: பின்னர், சாலை விரிவாக்கத்துக்காக சாலையோரம் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டன. அதேபோல தெருக்கள், வீதிகளில் உள்ள மரங்களும் புதிதாக சாலை அமைக்க இடையூறாக இருப்பதாக கூறி வெட்டப்பட்டன. ஆனால், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில்புதிதாக மரக்கன்றுகள் நடப்படவில்லை.
பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு நகரம் வெறிச்சோடி காணப்படுவதால், நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ஏற்கெனவே இருந்த தார் சாலைக்கும், நடைபாதைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் தற்போது சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது.
இதற்காக சாலையின் இருபுறமும் கான்கிரீட் கலவையை கொட்டி சமப்படுத்தி, அதன் மேல் தார் சாலை போடப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால், வருங்காலத்தில் காந்திஜி சாலை உள்ளிட்டபல சாலைகளில் மரக்கன்றுகளைநட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரங்கள் இல்லாமல் பொதுமக்கள் வெயில் நேரத்தில்இந்த சாலையில் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்படும்.
இதுகுறித்து அழகிய தஞ்சை -2005 திட்ட இயக்குநர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் கூறியது: தஞ்சாவூரில் முன்பு தனியார் அமைப்பு சார்பில் மாநகரம் முழுவதும் மரக்கன்றுகள் வைத்து பராமரித்து, நிழலை ஏற்படுத்தி தந்தனர். இதனால் மாநகரம் மரங்கள் நிறைந்து குளிர்ச்சியாக காணப்பட்டது.
இந்நிலையில் சாலையோரம் உள்ள மரங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டப்பட்டு, தற்போது மரங்கள் இல்லா தஞ்சாவூராக காட்சியளிக்கிறது. குறிப்பாக தெற்குவீதி, மேலவீதிகளில் இப்போது ஒரு மரம் கூட இல்லை. இதனால் அந்த பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதேபோல அருளானந்த நகரில்சாலையின் இருபுறமும் இருந்தமரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு, நடைபாதை அமைத்து அதில் பேவர் பிளாக் பதித்துள்ளனர். இதனால் அங்கும் மரங்கள் இல்லை.இப்படி தஞ்சாவூர் முழுவதும் சாலையோரம் மரங்கள் இல்லாமல் இருப்பதால், வெயில் நேரங்களில் பொதுமக்கள் நிழலுக்கு கூட ஒதுங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தன்னார்வ அமைப்புகள்: மாரியம்மன் கோயில் சாலை, ஞானம் நகர் போன்ற பல இடங்களில் சாலையோரம் மரங்கள் நட்டுபராமரிக்க தன்னார்வ அமைப்புகள் தயாராக உள்ளன. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதியை வழங்கினால் அங்கெல்லாம் மரக்கன்றுகளை நட்டு, மீண்டும் பசுமையான தஞ்சையை உருவாக்க முடியும் என்றார்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியது: தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான காந்திஜி சாலை, புதுக்கோட்டை சாலைஉள்ளிட்ட பகுதிகளில் இருபுறமும் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது.
தற்போது விரிவாக்கம் செய்யும் பணிகளில் மரங்கள் ஏதும் இல்லை. அந்த மரங்கள் எல்லாம் ஏற்கெனவே அகற்றப்பட்டதால், விரிவாக்கம் செய்யும் பணியை தொடங்கியுள்ளோம் என்றனர்.