

திருநெல்வேலி: எதிர்காலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க ஆண்டுக்கு 75.70 லட்சம் செடிகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வழக்கத்தைவிட கோடை வெயிலின் தாக்கம் தற்போது கடுமையாக அதிகரித் துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 110 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தும் வெயிலால் கரூர், பரமத்திவேலூர் போன்ற வட தமிழக பகுதிகளில் வெப்பஅலை வீசுகிறது. இதுபோல் தென்தமிழகத்திலும் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. இனி வரும் அக்னி நட்சத்திர காலத்தில் இந்த வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் தற்போது வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. இனி வரும் ஆண்டுகளில் கோடை வெப்பம் இந்த ஆண்டைவிட அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படும் நிலையில் இதை எதிர்கொள்ளவும், வெப்பத்தை தணிக்கவும் அரசும், தன்னார்வ அமைப்புகளும், பொதுமக்களும் மரங்களை நட்டு வளர்க்கும் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், சாலை விரிவாக்க பணிகளுக்காக பழமையான மரங்கள் நூற்றுக்கணக்கில் வெட்டி அப்புறப்படுத்தப் பட்டன. தற்போது சாலையோரங்களில் மரங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. இதனால் இந்த கோடையில் சாலையோரங்களில் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாத நிலைக்கு வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தள்ளப்பட்டுள்ளனர். இந்த வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து எதிர்காலத்தில் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள இப்போதே திட்டமிட்டு மரங்களை வளர்க்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர் சாமி நல்லபெருமாள் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 12,168 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 குக்கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிவோர் மூலம், மாதம் ஒரு செடி மட்டுமே நட்டு பராமரித்து வந்தால் போதும். நம் கிராமங்கள் பசுமையான கிராமங்களாக மாறிவிடும். 12,618 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் தலா 50 பேர் வீதம் மொத்தம் 6,30,900 நபர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் மாதம் ஒரு செடி நடவு செய்தால் கூட 6,30,900 செடிகளை நட்டு விடலாம். 12 மாதங்களுக்கு 75,70,800 செடிகளை நட்டு வளர்த்தெடுக்கும் வாய்ப்புகள் நம்மிடம் இருக்கிறது. இது கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கையாக இருந்தாலும், இதை சாத்தியமாக்க முடியும்.
தமிழகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் மழைக்காலம் ஆகும். இந்த காலங்களில் செடி நடவு செய்து ஓராண்டு காலம் பராமரித்தால் போதும். பின்னால் மரங்கள் வேர்களில் சேமித்து வைத்துள்ள ஈரத்தன்மையால் தானாக வளர்ந்து விடும். இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து, நமக்கும்,கால்நடைகளுக்கும் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம்.
100 நாள் வேலை திட்டத்தில் நடவு செய்ய தேவைப்படும் செடிகளை வனத்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் மரம் வளர்ப்பு குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.