Last Updated : 02 May, 2024 08:57 AM

 

Published : 02 May 2024 08:57 AM
Last Updated : 02 May 2024 08:57 AM

தமிழக மேற்கு மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொளுத்தும் வெயில்!

கோவையில் கொளுத்தி வரும் கோடை வெயிலால் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் காகிதங்கள் கருகி காணப்படுகின்றன. படம்: ஜெ.மனோகரன்.

கோவை: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் இயல்பான அளவை விட நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களான சேலத்தில் 108, ஈரோட்டில் 109, கோவையில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. கோவையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெயில் அதிகரித்துள்ளது. உதகையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 84 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்ப அலை வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் துறை தலைவர் சத்ய மூர்த்தி கூறும் போது, “நடப்பாண்டில் கால நிலை மாற்றத்தால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை சராசரியாக 2019-ல் 96.26, 2020-ல் 94.64, 2021-ல் 94.82, 2022-ல் 94.1, 2023-ல் 93.02, 2024-ல் 96.08 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது” என்றார்.

கோவை அரசு மருத்துவமனையின் முன்னாள் இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் கூறியதாவது: நீர் மோர், இளநீர், பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். கர்ப்பிணிகள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் வெயில் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

வியர்வையால் உடலில் இருந்து தாது உப்பு வெளியேறி பாதிப்பு ஏற்படும் என்பதால் பாட்டிலில் அடைத்த குளிர் பானங்கள், ஐஸ் கிரீம் ஆகியவற்றை வாங்கி குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தோல் நோய்கள், அம்மை, வியர்க்குரு வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் வர வாய்ப்புள்ளதால் நார்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நீர் சத்து குறைபாட்டினால் உடல் சோர்வு, மயக்கம், மூளை பாதிப்படைதல் மட்டுமின்றி ‘ஹீட்ஸ்ரோக்’ பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும், என்றார்.

காலநிலை மாற்றம் குறித்து, ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியதாவது: நடப்பாண்டில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயில் தாக்கம் உள்ளது. கரியமில வாயு, மீத்தேன் வாயு வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் வெயில் அளவும் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் 400 பிபிஎம் அளவாக உள்ளது. பசுமை இருந்தால் வெயில் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். நகரங்களில் மரங்களை வளர்க்க பசுமை பகுதிகளை அரசு அறிவிக்க வேண்டும். பசுமை பரப்பை அதிகரிக்க மக்களும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும். அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயு கால நிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.

காற்று, கடல் அலைகளில் இருந்து மாற்று எரிசக்தி முறை தொழில் நுட்பங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். கரியமில வாயுவை உறிஞ்சும் திறன் மரங்களுக்கு உண்டு. கரியமில வாயு வெளியாவதும், உறிஞ்சுவதும் சம அளவில் வைத்திருக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை புதிய தொழில் நுட்பங்கள் மூலம் சீரமைக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காக மரங்களை வளர்ப்பதும், மின்சாரம், பொது போக்குவரத்துக்கு புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவது தான் தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x