

கோவை: அணைகளில் நீர் வரத்து குறைந்துவிட்டதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியார் அணைகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்ள குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 2,649 எண்ணிக்கையிலான விசை பம்ப் பொருத்தப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் பொதுக்குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
மேலும் தண்ணீர் அவசியமாக தேவைப்படும் இடங்களில் 50 எண்ணிக்கையில் விசை பம்ப்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, தற்சமயம் 29 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் புதிதாக 24 ஆழ்குழாய் கிணறுகளும், பேரூராட்சி பகுதிகளில் புதிதாக 15 ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் கிணற்றுநீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக வழங்க 5 சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அணைகளிலிருந்து பெறப்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பொது மக்கள் தண்ணீரை குடிக்கவும் சமைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதர வீட்டு உபயோகத்திற்கு ஆழ்துளை கிணற்று தண்ணீரை வீணாக்காமல், மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.