

மூலவைகை வறண்டு கிடப்பதால் அதில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்சுரப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள் ளது.
தேனி மாவட்டத்தில் மூல வைகை, வைகை ஆறு, முல்லைப் பெரியாறுகளை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதற்காக ஆற்றின் வழித்தடத்தில் ஏராளமான உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆற்றின் நீரோட்டத்தினால் உறை கிணற்றில் சுரக்கும் நீரை பம்ப்பிங் மற்றும் சுத்திகரிப்பு செய்து விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக, கடமலை-மயிலாடும் பாறை ஊராட்சி ஒன்றியத்தில் கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, எட்டப்பராஜபுரம், துரைசாமிபுரம், குமணந்தொழு, கடமலைக்குண்டு, பொன்னன்படுகை, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு உள்ளிட்ட ஏரா ளமான ஊராட்சிகள், குடி நீருக்காக மூலவைகையில் உள்ள உறை கிணறுகளையே சார்ந் துள்ளன.
இங்குள்ள மலைக் கிராமங்கள் சரிவான நிலப்பகுதியை கொண் டுள்ளதால், நிலத்தடி நீரும் அதிகம் இருப்பதில்லை. இந்நிலையில், மூலவைகை வறண்டு கிடப்பதால் உறை கிணறுகளில் நீர்சுரப்பு குறைந்துள்ளது. இதனால் தண் ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மூல வைகை வறண்டுள்ளது.
இதனால் நீர்சுரப்பு குறைந்து பெறப்படும் நீரின் அளவும் குறைந்துவிட்டது. கோடை மழை பெய்தால் பாதிப்பு இருக்காது என்றனர்.