நாட்டார்குடி உப்பாற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுத்த முதியவர்.
நாட்டார்குடி உப்பாற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுத்த முதியவர்.

சிவகங்கை அருகே உப்பாற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் கிராம மக்கள்

Published on

சிவகங்கை: சிவகங்கை அருகே உப்பாற்றில் ஊற்றுத் தோண்டி கிராம மக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே மாத்தூர் ஊராட்சி நாட்டார்குடி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தண்ணீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், இக்கிராமத்தை விட்டு பலரும் வெளியேறிவிட்டனர். இப்பகுதி மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பை முழுமையாக நம்பியுள்ளனர். இக்கிராமத்துக்கு மாத்தூரில் இருந்து குடிநீர் வருகிறது.

தண்ணீர் வந்தாலும், அதை குடிக்க, சமைக்க பயன்படுத்த முடியவில்லை. இதனால் அக்கிராம மக்கள் 2 கி.மீ. தொலைவு நடந்து சென்று உப்பாற்றில் ஊற்றுத் தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமம் முழுவதும் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் பயனில்லை. மாத்தூரில் இருந்து வரும் தண்ணீரும் பருக முடியாது. இதனால் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம். சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து கொடுத்தனர்.

அதுவும் அவ்வப்போது பழுதடைந்து விடுகிறது. இதனால் நாங்கள் அதை நம்பாமல், ஆற்றில் ஊற்றுத் தோண்டி தண்ணீர் எடுக்கிறோம். தற்போது கோடை காலம் என்பதால் 6 அடி வரை குழிதோண்டி தண்ணீர் எடுக்க வேண்டும். மேலும், தண்ணீர் ஊற ஊற எடுப்பதால் ஒரு குடம் நிரப்பவே குறைந்தது 20 நிமிடங்கள் வரை ஆகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in