

அரூர்: வாணியாறு அணை வறண்டுள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலைத் தொடரில் ஏற்காடு மலையின் பின்பகுதி அடிவாரத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 65.27 அடி கொள்ளளவு கொண்டது.
இந்த அணையின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் உள்ள 17 கிராமங்களில் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அணை நீர் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதோடு அப்பகுதி செழிப்பாகவும் இருக்கும்.
கடந்த ஆண்டில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான ஏற்காடு மலைப் பகுதியில் கனமழை பெய்தது. அணை நிரம்பி தண்ணீர் முழுவதும் பழைய ஆயக்கட்டு கால்வாய்களில் திறந்து விடப்பட்டது.
ஆனால் நிகழாண்டு மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இன்றி நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. தற்போது மழை இல்லாதது, கோடை வெப்பம் உள்ளிட்டவற்றால் கடும் வறட்சி ஏற்பட்டு அணையில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மண் அள்ளுவதற்காக வெட்டப்பட்ட குழிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. அணை வறண்டுள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து வாணியாறு அணை பாசன விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு அணை நிரம்பி உபரி நீர், பழைய ஆயக்கட்டு கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் வெங்கட சமுத்திரம், ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை ஏரிகள் நிரம்பி உபரியாக ஆற்றில் தண்ணீர் வெளியேறி அரூர் பெரிய ஏரிக்கு சென்றது.
ஆனால், இவ்வாண்டு போதிய மழை இல்லாத நிலையில் அணை முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. வெட்டுக்குழிகளில் மட்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதை அணையில் இருந்து வெளியேற்ற முடியாது. இதனால் பாசனப் பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அணை நீரை நம்பி சுற்றுவட்டார விவசாயிகள் வாழை, பாக்கு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அணை வறண்டுள்ளதால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகத்தொடங்கியுள்ளன. கருகும் பயிர்களை கணக்கிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், அணை வறண்டுள்ள தால் பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம் பேரூராட்சிகள் மற்றும் வெங்கடசமுத்திரம், மோளையானூர், போதக்காடு, பையர்நத்தம், பொம்மிடி உள்ளிட்ட 18 ஊராட்சிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.