

சேலம்: சேலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக கூறி, ஆட்சியரகம் முன்பு உள்ள சாலையில் சமூக ஆர்வலர் ஒருவர் முட்டையை உடைத்து ஆஃபாயில் சுட்டார். அவரை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் 108 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் கண்ணுக்கெட்டிய தூரம் கானல் நீர் தெரிகிறது. மேலும், பொதுமக்கள் கடும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டி இளநீர், எலுமிச்சை பழ ரசம், கோசாபழம், முழாம்பழம், நுங்கு , மோர், பதனீர் என குளுமை தரும் பாணங்களை பருகி வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்த்துவதாக கூறி, சமூக ஆர்வலர் பிரபாகரன் ஒரு முயற்சி மேற்கொண்டார். சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபி சுற்று சுவர் மீது சமூக ஆர்வலர் பிரபாகரன் தான் கொண்டு வந்த கோழி முட்டையை உடைத்து ஊற்றினார். அடுப்பில் வைத்து சுட வேண்டிய முட்டையை, சூரியக் கதிர்களில் இருந்து வெளிப்படும் கடும் உஷ்ணத்தின் மூலம் சற்று நேரத்தில் ஆஃபாயிலாக சுட்டுக் காண்பித்தார்.
ஆட்சியர் அலுவலகம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், சமூக ஆர்வலர் பிரபாகரனிடம், “வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள சாலையில் ஆஃபாயில் சுட அனுமதி ஏதேனும் பெற்றுள்ளீர்களா?” எனக் கேட்டு விசாரித்தனர். அதற்கு சமூக ஆர்வலர் பிரபாகரன், “இது பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக செய்யப்படுவதால் யாரிடமும் அனுமதி பெற வில்லை” என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலர் பிரபாகரன் கூறும்போது, “கோடை வெயிலின் தாக்கம் குறித்து மாவட்ட நிர்வாகம் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வெயிலின் தாக்கத்தைக் கண்கூடாக அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் ஆஃபாயில் சுட்டு காண்பித்தேன்.
போலீஸார் டவுன் காவல் நிலையம் அழைத்து சென்று, சாலையில் ஆஃபாயில் சுட்டது தவறு என எழுதி வாங்கி கொண்டு, என்னை அங்கிருந்து விடுவித்து அனுப்பினர். வெயிலின் தாக்கம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவது கூட காவல் துறைக்கு தவறானதாக தெரியும்போது, பல நல்ல விஷயங்களை இளைஞர்கள் முன்னெடுத்து செயல்முறை விளக்கம் ஏற்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தயங்கவே செய்வார்கள்.
அரசு நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதற்குள் கோடை காலம் முடிந்து, மழைக் காலம் ஆரம்பித்து விடும். அதற்குப் பின் விழிப்புணர்வு ஏற்படுத்தி என்ன பயன்? சில, பல நல்ல விஷயங்களை அதிகாரிகள் ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார் அவர்.