

உடுமலை: உடுமலை அருகே வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால்,குடிநீருக்காக விலங்குகள் சாலையை கடப்பது அதிகரித்துள்ளது.
உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானை, காட்டெருமை, சிறுத்தை, மான், புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், அவை தாகத்தை போக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் நீர் நிலை ஆதாரங்களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளன.
கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையின் இரு புறமும் அடர்ந்த வனப்பகுதிகளாக உள்ளன. சாலையின் கிழக்கு புறமாக அமராவதி அணை உள்ளதால், மேற்கு பகுதியில் இருந்து ஏராளமான வன விலங்குகள் அணைக்கு செல்ல சாலையை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்திலும் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘வழக்கத்துக்கு மாறான தட்ப,வெப்ப நிலை மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. போதிய மழையின்மை காரணமாக வனப்பகுதிக்குள் உள்ள தடுப்பணைகள் வறண்டு காணப்படுகின்றன. நீராதாரம் தேடி அவை இடம் பெயர்ந்து வருகின்றன. எனவே, மேற்படி சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் நிதானத்துடனும், கவனமுடனும் பயணிக்க வேண்டும். வன விலங்குகளின் தாகம் தீர்க்கதேவையான நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும்’’ என்றனர்.