

ஓசூர்: ஜவளகிரி வனப்பகுதியில் வனத்துறையினர் அமைத்துள்ள தண்ணீர் தொட்டியில் யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் தண்ணீர் அருந்திச் செல்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஓசூர் ஆகிய வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வனஉயிரினங்கள் தண்ணீர் அருந்த வனத்துறையினர் செயற்கையாக தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக வன உயிரினங்கள் இத்தொட்டியில் தாகம் தீர தண்ணீர் பருகிச் செல்கின்றன. அதேபோல் ஜவளகிரி வனப் பகுதியில் அமைத்துள்ள தண்ணீர் தொட்டியில் அப்பகுதியில் உள்ள யானைகள், காட்டெருமை மற்றும் மான் போன்ற வன உயிரினங்கள் தண்ணீர் பருகியும், தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்ந்தும் வெயிலின் வெப்பத்தை தணித்துக் கொள்கின்றன.