

புதுடெல்லி: பூமி மனிதர்களுக்கு சொந்தமானது அல்ல என்றும், வனப்பகுதியை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோம்பல்லி கிராமத்தைச் சேர்ந்த முகமது அப்துல் காசிம் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கடந்த 1980 முதல் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த இடத்துக்கான சர்வே எண்ணில் உள்ள பிழையை திருத்தக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள், அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்றும் அதை தனிநபர் பெயரில் மாற்றமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர். எனினும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை அணுகிய காசிம், இந்த நிலத்தை வனப்பகுதி நிலம் என்பதை ரத்து செய்யக் கோரியுள்ளார்.
இதை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் காசிமுக்கு அந்த நிலத்தை ஒதுக்கி உள்ளார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், காசிமுக்கு அந்த இடத்தின் மீது எந்த உரிமையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: மாநில பிரிவினைக்குப் பிறகு காசிம் இந்த தீர்ப்பை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் ஆந்திரஉயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என அறிவித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
வனப்பகுதி நிலம்: வனப்பகுதி நிலத்தை தனிநபர் உரிமை கொண்டாட முடியாதுஎன ஆந்திர உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தெலங்கானா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லாது. வனப்பகுதி நிலத்தைகாசிமுக்கு ஒதுக்கியது செல்லாது.
1854-ம் ஆண்டு ஒரு பழங்குடியின தலைவர் அப்போதைய அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தில், பூமி மனிதனுக்கு சொந்தமானது அல்ல; மனிதன் பூமிக்குசொந்தமானவன் என்று கூறப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 48ஏ பிரிவின்படி, சுற்றுச்சூழல், வனம்மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
இதுபோல 51ஏ(ஜி)-யின்படி, வனம், ஏரி, ஆறுகள் உள்ளிட்ட இயற்கையை பாதுகாக்க வேண்டியது குடிமக்களின் கடமை ஆகும். பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளிலிருந்து நாட்டையும் உலகையும் காப்பாற்ற வனப்பகுதியை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
ரூ.5 லட்சம் அபராதம்: எனவே, காசிமுக்கு வனப்பகுதி நிலம் ஒதுக்கிய இந்த விவகாரத்தில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்த தெலங்கானா அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை தவறு செய்த அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.