கும்பகோணம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை

கும்பகோணம் அருகே ஊருக்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது.
கும்பகோணம் அருகே ஊருக்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது.
Updated on
1 min read

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தில் சனிக்கிழமை காலை முதலை புகுந்தது. தகவலறிந்து அங்குவந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். முதலைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது கடம்பங்குடி கிராமம். இப்பகுதியில் உள்ள களத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் காசிராஜன். இவரது தோட்டத்தின் வழியாக சனிக்கிழமை சென்ற பொதுமக்கள் தோட்டத்துக்குள் முதலையைப் பார்த்துள்ளனர். அவர்கள் உடனடியாக இதுகுறித்து சோழபுரம் காவல் நிலையம் மற்றும் வனத்துறையினருக்கு தகவலளித்தனர். இதையடுத்து, அங்கு வந்த வனவர் எம்.சண்முகம் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் போலீஸார் தோட்டத்தில் புகுந்த 4 அடி நீளம் உள்ள முதலையைப் பிடித்து, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியது, “கோடை காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வறண்டு விடுகிறது. இதனால், அங்கிருக்கும் முதலைகள் இரை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இந்த பகுதியில் இதுபோல நடப்பது வழக்கமான ஒன்றுதான். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் முதலையை பார்த்துவிட்டனர். இதனால், ஆடு,கோழி, கன்றுக்குட்டிகளுக்கு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் இருக்கும் முதலைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in