

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 2 வாரங்களுக்கு வெப்ப நிலையில் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்களைப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வரும் 2 வாரங்களுக்கு வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது மக்கள் பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பானங்களைப் பருக வேண்டும்.
முடிந்த வரை அவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பயணத்தின்போது, குடை மற்றும் குடிநீர் பாட்டிலை அவசியம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். வெளிர் நிறமுள்ள தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும்.
இதேபோல, முதியவர்கள் தங்கள் உடல் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். வெப்பத்தைத் தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளைத் துடைக்க வேண்டும். பொதுமக்களின் அவசர தேவைகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 1077 கட்டணமில்லா எண் மற்றும் 04343 -234444, 233077 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.