

பழநி: பழநி அருகே பாலாறு பொருந்தலாறு அணை பகுதிக்கு தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டமாக படையெடுத்து வருகின்றன. பழநி வனப்பகுதியில் காட்டு மாடு,மான், யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கோடைக் காலங்களில் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி இடம் பெயர்வது வழக்கம்.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி அணைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயரும் நிலை உள்ளது. பழநியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிக்கு தினமும் தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து யானைகள், குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வருகின்றன.
தண்ணீர் அருந்துவது மட்டுமின்றி உடல் முழுவதும் மண்ணை அள்ளி வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விளையாடி வருகின்றன. யானைகளை பார்ப்பதற்காக கொடைக்கானல் மலைச்சாலை 2-வது கொண்டை ஊசி வளைவு மற்றும் அணைப்பகுதியில் மக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் யானைகளை பார்த்து ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.
இந்த யானைகள், குடியிருப்பு பகுதிக ளுக்குள் நுழைவதில்லை என்பதால் பழநி தேக்கந்தோட்டம், ஆலமரத்துக்களம், அணைப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.