

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் தக்காளியை விவசாயிகள் ஓசூர் உழவர் சந்தைகளுக்கும், பத்தளப்பள்ளி தனியார் காய்கறி மார்கெட்டிற்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
பத்தளப்பள்ளி காய்கறி மார்க்கெட்டிலிருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளா மாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளியில் நோய் தாக்கம் மற்றும் வரத்து குறைவால், தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.
பின்னர் விளைச்சல் அதிகரிப்பால் படிப்படியாக விலை குறைந்தது. தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக தக்காளி ரூ.10 முதல் ரூ.18 வரை மட்டுமே விற்பனையான நிலையில், ஓசூர் அதன் சுற்றி உள்ள பகுதியில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால் தக்காளி மகசூல் குறையதொடங்கி உள்ளது.
இதனால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் கடந்த சில தினங்களாக தக்காளி விலை படிப்படியாக உயரத்தொடங்கி உழவர் சந்தையில் ரூ.25–க்கும் சில்லரை மார்க்கெட்டில் ரூ.30 க்கும் விற்பனையானது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது, “ஓசூர் பகுதியில் சாகுபடி செய்துள்ள தக்காளி செடிகளுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் தக்காளி வளர்ச்சியின்றி எலுமிச்சம் அளவிற்கு காய்த்துள்ளது. அந்த காய்களும் வெயிலுக்கும் செடிகளிலியே வெதும்பி சுருங்கி அழுகி வருகிறது.
மகசூல் பாதிப்பால் வரத்து குறைந்து தற்போது விலை உயர தொடங்கி உள்ளது. இதே நிலை நீடித்தால் கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை உயர்ந்தது போல் விலை உயர வாய்ப்புள்ளது. விலை உயர்வது மகிழ்ச்சியாக இருந்தாலும் சிறு விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படைவார்கள்” என்றார்.