

அரூர்: தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாத காரணத்தால் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
குறிப்பாக அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களாக மழை பெய்யாத நிலை மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெப்பம் காரணமாக விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் குறைந்து விட்டது. இப்பகுதியில் சராசரி நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்ததை விட 3.61 மீ. குறைந்து 8.04 மீட்டராக இருந்தது. இது மார்ச் மாத முடிவில் மேலும் குறைந்து 9 மீட்டரை நெருங்கியுள்ளது.
மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி, பொய்யப்பட்டி, ஆண்டியூர், தீர்த்தமலை, ராமியம்பட்டி, மொரப்பூர், கவுண்டம்பட்டி, சந்தப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, தென்கரைக்கோட்டை, கம்பை நல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. சில இடங்களில் 1,000 அடி ஆழத்துக்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் கூட தற்போது தண்ணீர் வற்றி விட்டது. இதனால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை, பாக்கு மற்றும் பல்வேறு பழச் செடிகள் புதிதாக நடப்பட்டன. தற்போது அந்த கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சில இடங்களில் விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி இளங்கன்றுகளை காப்பாற்ற முயன்று வருகின்றனர். அதே போல் நெடுஞ்சாலைத் துறையால் சாலையோரங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நூற்றுக் கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன.
அந்த கன்றுகள் கருகும் நிலையில் உள்ளதால் நெடுஞ்சாலைத் துறை சார்பில் தண்ணீர் வாங்கி மரக்கன்றுகளுக்கு ஊற்றி வருகின்றனர். மழை பெய்யும் என நம்பி பயிரிடப்பட்ட நெல், வாழை, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கும் போதிய அளவில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இது குறித்து விவசாயி குமரேசன் கூறுகையில், அரூர் பகுதியில் குளம், குட்டை மற்றும் நீர்த்தேக்கங்களை தூர்வாரி மழைநீர் சேமிப்பை முறைப்படுத்தியிருந்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருந்திருக்கும். தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் ஒரு லாரி தண்ணீரை ரூ.3,500 கொடுத்து வாங்கி ஊற்றி மரத்தைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளன.
குடிநீர், கால் நடைகளுக்கான குடிநீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு கணக்கெடுப்பு நடத்தி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் வறட்சியை தவிர்க்க அரசும், பொதுமக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து குளம், குட்டைகளை தூர் வாரிடவும், பராமரிக்கவும் முன் வரவேண்டும், என்றார்.