Published : 28 Apr 2018 11:27 AM
Last Updated : 28 Apr 2018 11:27 AM

காட்டை அழிக்கும் ‘நரகம்!’

ருக்கு வெளியில் காடு இருப்பது பெரிதல்ல. ஆனால், ஒரு மாநகருக்குள் ஒரு காடு இருப்பது, மகத்தான விஷயமில்லையா. மகத்தானவற்றை மரியாதைக்குரியவையாக யார் பார்க்கிறார்கள்? அதனால், நகரக் காடுகள் நரக வேதனைக்கு உள்ளாகின்றன. அதற்கு மிகச் சிறந்த உதாரணம்… சென்னையில் உள்ள கிண்டி தேசியப் பூங்கா!

இன்று கிண்டி, தொழிற்பேட்டைகளுக்கான பகுதி. 1670-களில், அது பசுமை செழித்த காடு. அன்றைய ஆங்கிலேயே ஆளுநர் வில்லியம் லாங்கோர்ன், அந்தக் காட்டின் ஒரு பகுதியை ‘லாட்ஜ்’ கட்ட அழித்தார். அன்று தொடங்கின, அந்தக் காட்டை அழிப்பதற்கான முயற்சிகள். நாடு விடுதலையடைந்த பிறகு ஆளுநர் மாளிகை கட்ட, கல்வி நிலையம் கட்ட, மருத்துவமனை கட்ட, தலைவர்களுக்கு நினைவு மண்டபங்கள் கட்ட என கட்டம் கட்டி, அந்தக் காடு கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னப்பட்டது.

28CHVAN_IITMADRAS

இதன் தொடர்ச்சிதான், சில வாரங்களுக்கு முன்பு திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வந்த பிரதமரின் ‘பாதுகாப்பு’க்காக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும்.

தொந்தரவு தரும் ஹெலிபேட்

ஐ.ஐ.டி. வளாகத்துக்குள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மான்கள் அதிக அளவில் இறக்கின்றன என்று ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், பிரதமரின் வருகைக்காக ‘ஹெலிபேட்’ அமைக்கப்பட்டது. அதற்காக சர்தார் படேல் சாலையில் உள்ள சிறுவர் பூங்காவையும் புற்றுநோய் மருத்துவமனையையும் பிரிக்கும் சுவர் இடிக்கப்பட்டது. இதற்குச் சூழலியலாளர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது.

‘ஒரு சுவரை இடிப்பதால் எப்படி சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்?’ என்று சிலர் கேட்கலாம். அந்த இடத்துக்கு மான்களோ அல்லது அழிந்து வரும் நிலையில் உள்ள வெளிமான்களோ நேரடியாக வராதுதான். ஆனால், ஹெலிபேட் உருவாக்கத்தால் எழும் தூசி, கழிவுகள், ஹெலிகாப்டர் ஏற்படுத்தும் சத்தம் போன்றவை, காட்டில் இரை தேடி அலையும் உயிரினங்களுக்குப் பெரும் தொந்தரவாக முடியும். இதனால், வழக்கமாக அந்தப் பகுதிக்கு இரை தேடி வரும் உயிரினங்கள், இனி எப்போதும் அந்த பகுதிக்கே வராமல் போகும் நிலை ஏற்படலாம்.

ஏற்கெனவே, இப்பகுதியில் ஹெலிபேட் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, சூழலியலாளர்களின் எதிர்ப்பால் அவை தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால், இப்போது ஹெலிபேட் அமைக்கப்பட்டிருப்பது, ஆளும் மத்திய அரசின் அளவற்ற அதிகாரத்தையே காட்டுகிறது. அதிகார நெருக்கடியால் இதுபோன்று மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகள் ஒருபுறம் என்றால், முறையான விழிப்புணர்வின்றி வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்கிற நடவடிக்கைகள் இன்னொரு புறம்.

இனப்பெருக்கத்துக்கு இடைஞ்சல்

காட்டுக்குள் இருக்கும் மரங்கள் வெட்டப்படுவது, உயிரினங்களின் தாகம் தீர்க்கிறோம் என்று ஆங்காங்கே குழிகளை வெட்டுவது, வனத்துக்குள் வாகனங்கள் சுலபமாகச் சென்று வர ஜல்லிக் கற்களால் சாலை அமைப்பது, சுவர் எழுப்புவது, சுவரை இடிப்பது போன்ற நடவடிக்கைகளால், அந்தக் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் ஏராளம்.

“சுமார் 1960-களில் இந்தக் காட்டின் சில பகுதிகளை, ‘காடே இல்லை’ என்று அரசு அறிவித்தது. காடு இல்லை என்று மனிதர்கள் சொல்லலாம். ஆனால், காட்டுயிர்களுக்கு இப்படி ஓர் அறிவிப்பு வெளியானது எப்படித் தெரியவரும்?” என்று கேள்வி எழுப்புகிறார் சென்னையைச் சேர்ந்த காட்டுயிர் செயல்பாட்டாளர் த. முருகவேள்.

காடுகளுக்குள் மேற்கொள்ளப்படும் ‘வளர்ச்சிப் பணிகள்’ தரும் பிரச்சினைகளைப் பற்றி அவர் பட்டியலிடுவதைப் பார்த்தால், ‘காடு இனி காப்பாற்றப்படாது’ என்ற எண்ணமே மேலிடுகிறது. “இந்த காட்டுப் பகுதி மிகவும் சிறியது. என்றாலும், அங்கு பலவிதமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. அவற்றின் எண்ணிக்கை, அவற்றின் ‘இணைசேர்தலை’ சார்ந்திருக்கிறது. ‘இணைசேர்தல்’, காட்டின் தன்மையைச் சார்ந்திருக்கிறது.

தேவையான அளவு இட வசதி, இரை, தட்பவெப்பம் போன்றவை இருந்தால் மட்டுமே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியும். ஆனால், காடுகளை துண்டுத் துண்டாக வெட்டி, கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டால், அங்கிருக்கும் உயிரினங்கள் இயல்பான முறையில் இனப்பெருக்கம் செய்வதில் சிக்கலாகும். அதனால் அவற்றின் எண்ணிக்கை குறையும்” என்கிறார் முருகவேள்.

காட்டை அழிக்கிறதா கல்வி?

கிண்டி தேசியப் பூங்கா அமைந்திருக்கும் வனப் பகுதிக்கு மிக நெருக்கமாக , ஐ.ஐ.டி., அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஆளுநர் மாளிகை ஆகியவை அமைந்துள்ளன. இந்த மூன்றிலும் அவ்வப்போது, ‘அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்’ என காட்டு நிலங்களைக் கையகப்படுத்தி, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஐ.ஐ.டி.யில் மேற்கொள்ளப்படும் ‘காடழிப்பு நடவடிக்கைகள்’ சூழலியலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்துவருகின்றன.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதே, ‘மான்கள் பூங்கா’வை அழித்துத்தான்! இந்தோ - ஜெர்மனி திட்டத்தின் கீழ் 1959-ம் ஆண்டு இந்தக் கல்வி நிறுவனம் உருவானது. அதற்கு முன்புவரை அந்தப் பகுதியில் மான்கள் அதிக அளவில் இருந்தன. அதுவும் நடிகர் சல்மான் கானைத் துரத்திக்கொண்டிருக்கிற வழக்குக்குக் காரணமாக இருக்கும் வெளிமான்கள் இங்கு அதிகமாக இருந்தன.

அதனால் அது ‘மான் பூங்கா’வாக அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 625 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்த அந்த நிலத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஐ.ஐ.டி. எடுத்துக்கொண்டது. அதன் பிறகு, இன்றுவரை அவ்வப்போது கட்டிடங்கள் வளர, அந்தக் காடு கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி வருகிறது.

மான்கள் வெகுதூரம் அலைந்து திரிந்து இரை தேடும் வழக்கம் கொண்டவை. அவற்றின் வாழிடம் சுருங்கத் தொடங்கும்போது, உணவு ஆதாரங்களும் சுருங்கத் தொடங்கும். நாளடைவில், போதிய உணவின்மையால் பட்டினியால் இறக்க, மான்களின் எண்ணிக்கையும் குறையும். ஆம்… காடுகளுக்குள் கட்டப்படும் ஒவ்வொரு கட்டிடத்தின் செங்கல்லிலும் ஒரு காட்டுயிரின் ரத்தம் படிந்திருக்கிறது!

யாருக்குப் பயன்?

இதுபோன்ற நகரக் காடுகள் காப்பாற்றப்படுவதால், அங்கு வாழும் காட்டுயிர்களுக்கு மட்டுமே நன்மை என்று யாராவது சொன்னால், அதைப் போன்ற தவறான புரிதல் வேறு இருக்க முடியாது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவை ஈர்த்துக்கொள்வது, ஒலி மாசுபாட்டைக் குறைப்பது, வெள்ள நீரை உறிஞ்சிக்கொள்வது, வெப்பத்தைக் குறைப்பது, மனிதர்கள் வாழ்வதற்குக் காரணமான உயிர் வாயுவான ஆக்சிஜனை பெருமளவில் தருவது என ஒரு காடு தரும் நன்மை அளப்பரியது.

மாநகர எல்லைக்குள் இருக்கும் நாட்டின் ஒரே ‘பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதி’ என்ற புகழைப் பெற்ற இந்தக் காட்டை பாதுகாத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணங்களும் அளப்பரியவை. இனிமேலாவது இதை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.



Sign up to receive our newsletter in your inbox every day!

 
x