

ராமேசுவரம்: தனுஷ்கோடி அருகே திடீர் கடல் சீற்றத்தால் கம்பிப்பாடு மீனவ கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்ததால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தனுஷ்கோடிக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்களும் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வீசக்கூடிய கச்சான் காற்றில் கடல் சீற்றம் மற்றும் ராட்சத அலைகள் ஏற்படுவ துண்டு. அப்போது இந்த கடற்பகுதிகளில் அலையின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இப்பகுதிகளில் உள்ள மீனவக் குடிசைகளில் கடல் நீர் புகுந்து விடும் கடல் அரிப்பும் அதிகமாகும்.
இந்நிலையில் நேற்று மாலைதனுஷ்கோடியிலிருந்து அரிச்சல்முனை கடற்பகுதி வரையிலும் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு கடல் சீற்றம் ஏற்பட்டு கம்பிப்பாடு மீனவ கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்தது. அங்கு தேவாலயம், மீனவக் குடிசைகள் மற்றும் சில கடைகளிலும் கடல் நீர் சூழ்ந்தது. மேலும் தேசிய நெடுஞ்சாலையையும் அலைகள் தாக்கியதால் கடல் அரிப்புக்காக போடப்பட்ட கற்களும் சாலையில் சிதறிக் கிடந்தன.
இந்த திடீர் கடல் சீற்றத்தால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்தவர்கள் நேற்று மாலை போலீஸாரால் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனுஷ்கோடி ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலையும் மூடப்பட்டது. கம்பிப்பாடு மீனவக் கிராமத்தில் கடல் நீர் புகுந்ததில் மீனவக் குடிசைகள், கடைகளிலிருந்து பொருட்களை மீட்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.