

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நாய்களிடம் இருந்து புள்ளிமானை மீட்ட பெண்ணை வனத்துறையினர் பாராட்டினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை, திருக்களாப்பட்டி, மேலவண்ணாரிருப்பு, கரிசல்பட்டி, எஸ்.வி.மங்கலம், சுக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனத்தில் அதிக அளவில் புள்ளிமான்கள் உள்ளன. தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், வனப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் நீர்நிலைகள் வறண்டன. இதனால் மான்கள் தண்ணீர் குடிக்கவும், இரைத் தேடியும் குடியிருப்புக்குள் புகுந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று சுக்காம்பட்டி குடியிருப்புக்குள் ஒன்றரை வயதுள்ள பெண் புள்ளி மான் தண்ணீர் குடிக்க வந்தது.
அப்போது அங்கிருந்த நாய்கள் புள்ளிமானை கடித்தன. இதை பார்த்த யோகேஸ்வரி என்பவர் நாய்களை விரட்டி மானை மீட்டார். காயமடைந்த அந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு சிங்கம்புணரி கால் நடை மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் எஸ்.வி.மங்கலம் வனப்பகுதியில் புள்ளிமானை விட்டனர். துரிதமாக செயல்பட்டு நாய்களிடம் இருந்து மானை மீட்ட யோகேஸ்வரியை வனத்துறையினர் பாராட்டினர்.