தருமபுரியில் தண்ணீர் தேடி வந்த 2 மான்கள் உயிரிழப்பு - நாய்கள் கடித்ததால் பரிதாபம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

அரூர்: தருமபுரி மாவட்டம் பொம்மிடி கவரமலை வனப் பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. போதிய மழை இல்லாததால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக காப்புக்காட்டில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு காணப் படுகின்றன.

இதனால், வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேடி வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் நுழைகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில்,நேற்று காலை கவரமலை பகுதியில் இருந்து, ஒன்றரை வயதுள்ள பெண் மான் மெணசி - விழுதிப்பட்டி சாலையில், ஈஸ்வரன் என்பவரது விவசாய நிலத்துக்கு தண்ணீர் தேடி வந்தது‌. இதைக் கண்ட அங்கிருந்த நாய்கள் விரட்டிக் கடித்ததில் மான் உயிரிழந்தது.

இதே போன்று தாளநத்தம் - பொம்மிடி சாலையில் பில்பருத்தி வனத்திலிருந்து தண்ணீர் தேடி வந்த, 2 வயதுடைய ஆண் மான் கோபி என்பவரது நிலத்துக்கு வரும் போது நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், இறந்த மான்களை மீட்டு பொம்மிடி கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் ரவி மூலம் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மான்களை அடக்கம் செய்தனர். இதனிடையே, பொம்மிடி பேருந்து நிலையம் அருகே தண்ணீர் தேடி வந்த மற்றொரு மானை வனத்துறையினர் உயிருடன் மீட்டு, முருகன் கோயில் வனப்பகுதியில் விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in