

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக் கோயில் பின் பகுதியில் நேற்று காட்டுத் தீ ஏற்பட்டது.
ஓசூர் நகரின் மையப் பகுதியில் உள்ள மலை மீது மரகாதம்பாள் சமேத சந்திர சூடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான மரம், செடி, கொடிகள் அதிக அளவில் உள்ளன. தற்போது, கோடை வறட்சி காரணமாக மலை மீதுள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகாகி உள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் மலையின் பின்புறம் உள்ள காய்ந்த மரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், மலை மீது சென்றவர்கள் யாராவது பீடி, சிகரெட்டை பற்ற வைத்து அப்பகுதியில் எரிந்து இருக்கலாம். அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.