

ஆண்டிபட்டி: வைகை அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லை. நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம், குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான அரசரடி, இந்திரா நகர், வெள்ளிமலை, புலிகாட்டு ஓடை, பொம்முராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் மூலவைகையாக உருவெடுத்து அணைக்கு வருகிறது. சில மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. இதனால் மூலவைகை மணல்வெளியாக காட்சியளிக்கிறது.
வைகையின் துணை ஆறுகளான கொட்டக்குடி, வரட்டாறு, பாம்பாறு, சுருளி ஆறு உள்ளிட்ட பல ஆறுகளில் ஏற்கெனவே நீரோட்டம் இல்லாத நிலை உள்ளது.
இந்நிலையில் வைகை அணையின் முக்கிய நீராதாரமான பெரியாறு அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் 141அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 118 அடியாக இருந்தது.
தற்போது இங்கிருந்து விநாடிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீரும் வைகை அணைக்கு வருவதற்குள் வழிநெடுகிலும் உள்ள சுடுமணலால் உறிஞ்சப்பட்டு விடுகிறது.
இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து கடந்த 3 நாட்களாக பூஜ்ய நிலையிலேயே உள்ளது. அதே நேரத்தில் விநாடிக்கு 1,202 கன அடி நீர் வைகை அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று 64.2 அடியாக (மொத்த உயரம் 71 அடி) நீர்மட்டம் இருந்தது.
கோடை காலம் காரணமாக இன்னும் சில மாதங்கள் நீர்வரத்துக் கான வாய்ப்பு இல்லாத நிலையில், அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு இதே நாளில் 53 அடி நீர்மட்டமே இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது கூடுதலாகவே தண்ணீர் உள்ளது. இதனால் கோடையில் குடிநீர் திட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் மதுரை சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு நீர் திறக்கும் அளவுக்கு அணையில் தண்ணீர் இருப்பு உள்ளது என்று கூறினர்.