Published : 22 Mar 2024 10:14 AM
Last Updated : 22 Mar 2024 10:14 AM

2030-ல் நாட்டின் குடிநீர் தேவை 2 மடங்கு அதிகரிக்கும் | இன்று உலக தண்ணீர் தினம்

மதுரை: எத்தனை வளங்கள் இருந்தாலும் ஒரு நாட்டில் நீர் வளம் இல்லாவிட்டால் அந்த நாடு மக்கள் வசிக்க முடியாத பாலைவனமாகி விடும். பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 சதவீதம் உப்புத் தன்மை கொண்டது. 2.5 சதவீதம் மட்டுமே நன்னீர். இதில், மிகக் குறைவான 1.2 சதவீதம்தான் நுகர்வுக்குரியது.

மனிதனின் அன்றாட வாழ்வில் உணவு தயாரிப்பது, சமைப்பது, அருந்துவது, குளிப் பது போன்ற பல செயல்களுக்கு தண்ணீர் இன்றியமையாதது. அதேபோல் பாசனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் அத்தியாவசிய மாகிறது. இந்தியா நதிகளின் நாடு. ஆனால், தற்போது பெரும்பாலான நதிகள் மாசுபட்டுள்ளன. இவற்றை முறையாகப் பராமரிக்காததால் நாட்டில் பல நகரங்களில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்கள் குடிநீர் பற்றாக்குறையை ஆண்டுதோறும் எதிர்நோக்குகின்றன. அதேபோல், டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களும் கோடை காலத்தில் மிகப்பெரிய குடிநீர் பற்றாக் குறையைச் சந்திக்கின்றன. தென்தமிழகத்தில் வைகை ஆறு, ஏராளமான கண்மாய்கள் என செழிப்பான நகரமாக மதுரை திகழ்ந்தது. காலப்போக்கில் கட்டிடங்கள், பாலங்கள், சாலை அமைப்பதற்கு கண்மாய்கள் அழிக்கப்பட்டதால் தற்போது கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.

அவ்வாறு அழிக்கப்பட்ட நீர்நிலைகள் பெயரிலே மதுரையில் தல்லாகுளம், பீபி குளம், மாடக்குளம், சொக்கிகுளம் போன்ற 25-க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் உள்ளன. நீர்நிலைகளின் முக்கியத்துவம், அதனை எதிர்கால தலைமுறையினருக்குப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து அரசுகளுக்கும், மக்களுக்கும் சரியான புரிதல் இல்லாததால், நீர்நிலைகளைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியருமான மு.ராஜேஷ் கூறியதாவது: 163 மில்லியன் இந்தியர்களுக்குச் சுத்தமான குடிநீர் இல்லை. 21 சதவீத நோய்கள் பாதுகாப்பற்ற குடிநீருடன் தொடர்புடையவை. கலப்பு நீர் மேலாண்மை குறியீட்டு அறிக்கையின்படி 2030-ம் ஆண்டில் நாட்டின் தண்ணீர் தேவை, விநியோகத்தைவிட 2 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இது நாட்டின் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் 2050-க்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத இழப்பைக் குறிக் கிறது. பாதுகாப்பான குடிநீர் இல்லாததால் ஒவ் வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் மரணமடைகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆராய்ச்சியின்படி, 2030-ம் ஆண்டில், 40 சதவீத மக்கள் குடிநீரைப் பெற போராட வேண்டி இருக்கும். நாட்டில் தற்போது உள்ள 84 சதவீத கிராமப் புறக் குடும்பங்களுக்கு குழாய் நீர் வசதி இல்லை.

ராஜேஷ்

மேலும், வீட்டுக்கு அருகிலேயே சுத்தமான நீர் ஆதாரங்கள் இருந்தும் 88 சதவீத கிராமப்புறக் குடும்பங்களுக்கு குடிநீர் இல்லை. 2025-க்குள் நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீர் ஆதாரங்கள் போது மானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் அரசுகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் மிகப்பெரும் பங்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தண்ணீரை வீணாக்குவதில் இந்தியா 6-வது இடம்: இந்தியாவில் சராசரியாக நபர் ஒருவர், குழாயைத் திறந்து ஓடவிடுவதன் மூலம் நிமிடத்துக்கு 5 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. 3 முதல் 5 நிமிடங்களுக்கு பல் துலக்கும்போது சுமார் 25 லிட்டர் தண்ணீரும், பாத்திரங்களைக் கழுவும் போது 20 முதல் 60 லிட்டர் தண்ணீரும் வீணாகிறது.

இந்தியாவில் தற்போது 40 பில்லியன் லிட்டராக இருக்கும் தண்ணீரின் தேவை 2025-ம் ஆண்டுக்குள் 220 பில்லியன் லிட்டராக உயரும். குளிப்பதற்கும், கழிப்பறைக்கும் சுமார் 27 சதவீதம் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். தோராயமாக, ஒரு கசிவு குழாய் 4,000 துளிகள் தண்ணீரை வீணாக்குகிறது, இது ஒரு லிட்டர் தண்ணீருக்குச் சமம். அதிக தண்ணீர் வீணாக்கும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 6-வது இடத்திலும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x