

ஓசூர்: வனத்துறையைக் கண்டித்து, தேன்கனிக்கோட்டை அருகே அய்யூரில் மலைக் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் மலைக் கிராமம் உள்ளது. மேலும், அதனைச் சுற்றி 40-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தைப் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது, இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் வறட்சியின் காரணமாக தண்ணீரின்றி வறண்டுள்ளது. இதனால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்பகுதி விளை நிலங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்த்துளைக் கிணறுகளைத் தூர்வார பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த 19-ம் தேதி வனத்துறையைக் கண்டித்து தேன்கனிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்த விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். இதனிடையே, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள், வருவாய்த் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற அமைதி கூட்டம் நடந்தது. இதில், விவசாயிகள் கோரும் விளை நிலங்கள் காவிரி வன உயிரின காப்பகம் பகுதியில் வருவதால், உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று கிணறுகளைத் தூர்வார வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தைத் தற்காலிகமாக ரத்து செய்தனர். இதனிடையே, வனத்துறையைக் கண்டித்து பெட்டமுகிலாளம் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அய்யூர் வனத்துறை சோதனைச் சாவடி அருகே நேற்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தைச் சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற டிஎஸ்பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பெட்டமுகிலாளம்- தேன்கனிக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.