வனப்பகுதியில் கடும் வறட்சி நீடிப்பதால் தண்ணீர் அருந்த பாலாற்றில் முகாமிட்ட யானைகள்

தமிழக- கர்நாடக எல்லையான அடிப் பாலாற்றில் தண்ணீர் அருந்த வந்துள்ள யானைகள்.
தமிழக- கர்நாடக எல்லையான அடிப் பாலாற்றில் தண்ணீர் அருந்த வந்துள்ள யானைகள்.
Updated on
1 min read

மேட்டூர்: தமிழக - கர்நாடக வனப்பகுதியில் கடும் வறட்சி நீடிப்பதால், தண்ணீர் தேடி வந்த யானைகள் பாலாற்றில் நேற்று முகாமிட்டன. இந்த யானைகள் கிராமத்துக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 28 கிமீ தொலைவில், தமிழக - கர்நாடக எல்லையில் பாலாறு மற்றும் சென்னம்பட்டி வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன. வனப்பகுதியில் ஏராளமான நீரோடைகள், குட்டைகள் உள்ளன. வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் நீரோடைகளில் தண்ணீர் அருந்தி தாகத்தை தணிக்கும். நடப்பாண்டில் கடும் வெயில் தாக்கம் காரணமாக, பசுமையாக காணப்பட்ட வனப்பகுதி வறட்சியால் கருகி காணப்படுகிறது.

வனப்பகுதியில் உணவு, தண்ணீர் இல்லாததால் அங்கிருந்து வெளியேறி பாலாறு பகுதியில் வன விலங்குகள் முகாமிட்டு வருகின்றன. நீர்வரத்து பகுதி, மாதேஸ்வரன் மலை சாலையோரம் விலங்குகள் சுற்றுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் பாலாறு வனப்பகுதியில் இருந்து நேற்று யானைக் கூட்டம் ஒன்று வெளியேறி பாலாற்றில் தண்ணீர் அருந்த முகாமிட்டது. காவிறு ஆறு மற்றும் பாலாற்றில் வரும் நீரை அருந்தி தாகத்தை தணித்து கொண்டது.

இதை சாலையில் சென்ற மக்கள், சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். இதனிடையே, நீர்வரத்து பகுதியை நோக்கி தினமும் யானைக் கூட்டம் வருவதால், கிராமப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in