

சேலம்: ஏற்காடு சுற்றுலா தலம் அமைந்துள்ள சேர்வராயன் மலைப்பகுதிகளில் காட்டு தீ பரவிய நிலையில், வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு படையினர், வன உரிமைக் குழுவினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருடன் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் அருகே அமைந்துள்ள சேர்வராயன் மலைத் தொடரானது, ஏற்காடு மற்றும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா ஆகிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காப்புக் காடுகளுடன் இருக்கிறது. இந்நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு, சேர்வராயன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க, வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது, வனப்பகுதிகளில் 24 மணி நேர ரோந்துப் பணி என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வனத்தையொட்டிய கிராமங்களில் வன உரிமைக்குழு ஆகியவற்றின் மூலம் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் மலைமீது அமைந்துள்ள ஏற்காடு, கருமந்துறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வருபவர்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து வரக்கூடாது, வனப்பகுதிகளில் தீ விபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்காடு மலைப்பாதை அடுத்துள்ள வனப்பகுதி, குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை அடுத்துள்ள காப்புக்காடு உள்பட, சேர்வராயன் மலையில் உள்ள காப்புக் காடுகளில் மாலையில் ஆங்காங்கே தீ ஏற்பட்டு பரவத் தொடங்கியது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி தலைமையில், வனச்சரகர்கள், வனத்துறை ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர், வன உரிமைக்குழுவினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், ஏற்காடு மலையில் ஆங்காங்கே பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், காற்று வீசுவதால், அடுத்தடுத்த பகுதிகளிலும் தீ பரவியது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டு தீ ஏற்படாமல் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே செய்துள்ளோம். தற்போது ஏற்பட்டிருப்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தீ விபத்தாக அறிய முடிகிறது. காப்புக்காட்டில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்டோர் போராடி வருகிறோம். தீயணைப்புத்துறை வாகனம் காப்புக்காட்டுக்குள் குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. இரவில் தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொள்வது சாத்தியமற்றது என்றனர்.