உடுமலை அருகே சாலையில் நடமாடிய ராட்சத முதலை

உடுமலை அருகே கொழுமம் சாலையை கடந்து சென்ற ராட்சத முதலை
உடுமலை அருகே கொழுமம் சாலையை கடந்து சென்ற ராட்சத முதலை
Updated on
1 min read

உடுமலை: உடுமலை அருகே கொழுமம்- பழநி பிரதான சாலையில் இரவில் முதலை நடமாடியதைக் கண்ட மக்கள், அச்சத்தில் உறைந்தனர். உடுமலையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் கொழுமம் ஊராட்சி உள்ளது. அமராவதி ஆற்றை ஒட்டி பழநி செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் வயல்வெளிகள், ஆறு, சிறு ஓடைகள், குளம், குட்டைகள் உள்ளன.

கொழுமம்- பழநி சாலையில் எந்த நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும்.

கடந்த 2 நாட்களுக்கு முன் இச்சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம், கொழுமம் பகுதியை கடந்து அங்குள்ள சோதனைச் சாவடி வழியாக சென்றது. அதில் பயணம் செய்த சிலர், கொழுமம்-பழநி சாலை வழியாக ராட்சத முதலை நடமாடுவதாகக் கூறி வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அமராவதி அணை மற்றும் குதிரையாறு அணை ஆகியவற்றில் மழைக்காலங்களில் உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம்.அவ்வாறான சமயங்களில் முதலைகள் தண்ணீரில் அடித்துக்கொண்டு இப்பகுதிக்கு வருவதும், உபரி நீர் வடிந்ததும் நீர்த்தேக்கங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு இந்த முதலைகள் உயிர் வாழத்தொடங்குவதும் வாடிக்கையாகவே மாறிவிட்டது.

கல்லாபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் பல ஆண்டுகளாக முதலை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து தகவல் கொடுத்தும், முதலையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கொழுமம் பகுதியில் முதலையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் விவசாய வேலைகளுக்கு செல்வோர், கால்நடை மேய்ப்பவர்கள், கூலித் தொழிலாளர்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, உடனடியாக மேற்படி பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து, முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in