

மதுரை: மதுரை மாநகரில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், மாணவ, மாணவிகள் வெயிலில் இருந்து தப்பிக்க மழைக்காலம் போல் குடைகளுடன் தற்போது பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், சேதமும் ஏற்பட்டாலும் கூட, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.
அதனால், இந்த மாவட்டங்களில் தற்போது கோடை காலம் தொடங்கியவுடனே குடிநீர் பற்றாக்குறை ஏற்படத்தொடங்கியுள்ளது. மழைநீர் சேகரிப்பு வைத்திருப்போரும், நீர் நிலைகள் அருகே வசிப்போருக்கு மட்டுமே நிலத்தடிநீர் மட்டம் தற்போது வரை பிரச்சினையில்லை.
இந்நிலையில் பருவமழை ஏமாற்றிய தென் மாவட்டங்களில் கோடை வெயில் நாளுக்கு நாள் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மதுரை மாநகரில் கடந்த ஒருவாரமாக கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட முடியவில்லை.வாகனங்களில் செல்ல முடியவில்லை.
வெயிலில் மக்கள் சோர்வடையும் நிலையும், மயங்கி விழும் நிலையும் ஏற்படுகிறது. கூடுதல் வெப்பம், வெயிலால் வீடுகள், அலுவலங்களில் இருந்தாலும் உடல் சூடு அதிகமாக உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதிலிருந்து தப்பிக்க ஏசி போட்ட அறையில் இருந்தாலும், குளிர்பானங்கள் பருகினாலும் மக்கள் இந்த கோடை வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
பெண்கள், முதியவர்கள், பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளை இந்த வெயில் மிகவும் பாதித்துள்ளது. ஏற்கனவே நோய் குறைபாடுகள்ள பெண்கள், அவர்களுடைய மாதவிடாய் காலத்தில் மிகவும் சோர்வடைந்து மயங்கி விழுகின்றனர். ரத்தசோகை, ரத்த அழுத்தம் குறைபாடு போன்ற உடல் குறைபாடுகள் ஏற்பட்டு சிரமம் அடைகின்றனர்.
முதியவர்கள் மிகவும் சோர்வடைந்து அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காலையில் உற்சாகமாக பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் குழந்தைகள் வீடு திரும்பும்போது உடல் சோர்வுடன் திரும்புகின்றனர். தற்போது ப்ளஸ்-டூ தேர்வு நடப்பதால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு மாலையில்தான் வகுப்புகள் உள்ளன.
தற்போது அடிக்கும் வெயிலில் குழந்தைகள் பெற்றோர் உதவியுடன் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. மதியம் நேரங்களில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், பெற்றோர் துணையின்றிதான் தற்போது பள்ளிக்கு செல்கிறார்கள்.
அதனால், அவர்கள் குடைகளுடன் பள்ளிக்கு செல்கின்றனர். மழைக்காலம் போல் பள்ளி மாணவர்கள், சாலைகளில் குடைகளை பிடித்தப்படி செல்வது, ஏதோ மழைக்காலத்தை நமக்கு நினைவுப்படுத்துவது போல் உள்ளது.
இன்னும் தேர்வுகள் முடிவுதற்கு ஒரு மாதத்திற்கு மேல் உள்ளதால் இந்த கோடை காலம், பள்ளி மாணவர்களுக்கு போதாத காலம் போல் உள்ளது. பெற்றோர்கள் இந்த கோடை வெயிலில் இருந்தும், அதன் உஷ்ணத்தில் இருந்து காப்பாற்ற மருத்துவர்கள் அறிவுத்தும் வழிமுறைகளை பிடிக்க வேண்டும்.