மனித - யானை மோதல், காட்டுத் தீயை தடுக்க உதவும் ‘தெர்மல் இமேஜ் கேமரா’ @ கோவை

கோவை மருதமலை கோயில் அருகே நிறுவப்பட்டுள்ள தெர்மல் இமேஜ் கேமரா அமைப்புக்கான உயர் கோபுரம்.
கோவை மருதமலை கோயில் அருகே நிறுவப்பட்டுள்ள தெர்மல் இமேஜ் கேமரா அமைப்புக்கான உயர் கோபுரம்.
Updated on
2 min read

கோவை: மனித - யானை மோதலை தடுக்கவும், வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கவும் கோவை வனக்கோட்டத்தில் மூன்று இடங்களில் தெர்மல் இமேஜ் கேமரா அமைப்பு நிறுவப்பட்டது. இந்த வகை நவீன கேமரா அமைப்பு இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்குவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை வனக்கோட்டம் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்களை உள்ளடக்கியதாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல வகை வன உயிரினங்கள் வாழ்கின்றன. கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் மனித-யானை மோதலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை 9,028 முறை யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி உள்ளன.

மதுக்கரை வனச்சரகத்தில் யானைகள் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு அமைப்பு ரூ.7.24 கோடி மதிப்பில் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக அதிநவீன தொழில்நுட்பங்களை கையாளும் திட்டங்களை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், கோவை வனச்சரகத்தில் இரண்டு இடங்களில் அதாவது மருதமலை கோயில் மற்றும் தடாகம் பொன்னூத்து அம்மன் கோயில் அருகில், மதுக்கரை வனச்சரகத்தில் உலகாம்பிகை கோயில் அருகில் என மூன்று இடங்களில் ‘தெர்மல் இமேஜ் கேமரா’ அமைப்பு நிறுவப் பட்டுள்ளது. உயர் கோபுரங்கள் அமைத்து அதில் தெர்மல் இமேஜ் கேமரா நிறுவி 360 டிகிரி கோணத்தில் 900 மீட்டர் தொலைவில் 0.9 ஹெக்டர் பரப்பளவில் புகைப் படங்களையும், வீடியோக்களையும் நிகழ் நேரத்தில் பதிவு செய்து அனுப்பும்.

24 மணி நேரமும் செயல்படும் தெர்மல் இமேஜ் கேமரா மூலம் இரவு நேரங்களிலும் யானைகள் நடமாட்டத்தைத் துல்லியமாக பதிவு செய்ய முடியும். வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெர்மல் இமேஜ் கேமராக்கள் மழை பெய்யும்போது வைப்பர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இடி மின்னலில் இருந்து தப்பிக்க இடிதாங்கி அமைப்பும் மூன்று கேமராக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கவும், வனப் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.

இது குறித்து, கோவை வனக்கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: யானைகள் வனத்தை விட்டு விளைநிலங்கள், குடியிருப்புகளில் புகுவதைத் தடுக்கும் வகையில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் மூன்று இடங்களில் தெர்மல் இமேஜ் கேமரா நிறுவப்பட்டது. யானைகள் அதிகம் நடமாடும் பகுதியைக் கண்டறிந்து அங்கு இந்த உயர் கோபுரம் அமைத்து தெர்மல் இமேஜ் கேமராவை நிறுவி கண்காணிக்கப்படும். வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறும் போது தெர்மல் இமேஜ் கேமராவில் பதிவாகும்.

24 மணி நேரமும் இயங்கும் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மாவட்ட வனக்கோட்ட அலுவலகத்தில் உள்ள கட்டுப் பாட்டு அறைக்கு ரேடியோ அதிர்வலை ( ஆர்.எஃப்.) பெறப்படும். பின்னர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வனத்துறை களப்பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யானைகளை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மலைப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.

இதனால் வனப் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கவும் தெர்மல் இமேஜ் கேமரா அமைப்பு உதவும். இம்மாத இறுதிக்குள் இது பயன் பாட்டுக்கு வரும். தற்போது பரிசோதனை முறையில் செய்யப்படும் இந்த தெர்மல் இமேஜ் கேமரா அமைப்பு வனக் கோட்டத்தில் முழுவதும் உள்ள சரகங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

சுமார் 10 இடங்களில் தெர்மல் இமேஜ் கேமரா நிறுவப்பட்டு கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெர்மல் இமேஜ் கேமரா அமைப்பு கண்காணிப்பு பணிக்காக, கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தின முதல் மாடியில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெர்மல் இமேஜ் கேமராவின் சிறப்பு: சாதாரண சிசிடிவி கேமராக்களை பொறுத்தவரை 100 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை கண்காணிப்பு செய்திட முடியும். ஆனால், தெர்மல் இமேஜ் கேமரா என்பது 1 கிலோ மீட்டர் தொலைவு வரை வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

அடர்ந்த காடுகளில் புதர்களில் பின்னால் மறைந்திருந்தாலும் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் உடல் வெப்ப நிலையைக் கொண்டு அதன் அசைவை தெர்மல் இமேஜ் கேமரா காட்டி கொடுத்து படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்துவிடும். மேலும் காட்டுத் தீ பரவுவதையும், காடுகளில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களையும் தெர்மல் இமேஜ் கேமிரா காட்டி கொடுத்துவிடும் என்பது கூடுதல் சிறப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in