‘தம்மம்பட்டி அருகே பூச்சிக்கொல்லி ஆலையை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு’

கெங்கவல்லி வட்டம் மண்மலை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி ஆலையை அகற்றக்கோரி, தம்மம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்மலை ஊராட்சி மக்கள் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள்.
கெங்கவல்லி வட்டம் மண்மலை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி ஆலையை அகற்றக்கோரி, தம்மம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்மலை ஊராட்சி மக்கள் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள்.
Updated on
1 min read

சேலம்: கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள மண்மலை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மொடக்குப்பட்டியில் தனியாரால் கட்டப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி ஆலையை அகற்றக்கோரி, மண்மலை ஊராட்சி மக்கள் நலச்சங்கம் மற்றும் செந்தாரப்பட்டி விவசாயிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர், தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கணேசன், செந்தில், நிர்மல் குமார் ஆகியோர் தலைமையில் பெண்கள், பொதுமக்கள், விவசாயிகள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்து மண்மலை ஊராட்சி மக்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் கூறியது: மண்மலை மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமங்களாகும். மொடக்குப்பட்டி பகுதியில், 2021-ம் ஆண்டு தனியாரால் வேப்பம் புண்ணாக்கு உற்பத்தி ஆலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் விவரங்களை பெற்ற போது, ரசாயன பூச்சிக்கொல்லி ஆலை அமைக்கப்படும் தகவல் கிடைத்தது. தொடர்ந்து, ஆலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், சட்ட விரோதமாக அனுமதிகளைப் பெற்று ஆலை கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலை செயல்படத் தொடங்கினால், சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசடைந்து, விளை நிலங்களும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படும்.

இதன் காரணமாக, மண்மலை ஊராட்சி நிர்வாகம், ரசாயன ஆலைக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, அந்த ஆலையை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால், மக்களவைத் தேர்தலை புறக்கணித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in