

மேட்டுப்பாளையம்: கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இவ்வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான், செந்நாய் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இருப்பினும் இங்கு மற்ற உயிரினங்களை காட்டிலும் யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
கோடை வெயில் காரணமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தற்போது கடுமையான வெப்பமும், வறட்சியும் நிலவி வருகிறது. வன உயிரினங்களின் தாகம் தீர்க்க உதவும் வன குட்டைகள், நீரோடைகள் என அனைத்து நீராதாரங்களும் பெரும்பாலும் வறண்டு விட்டன.
இதுபோன்ற வறட்சி காலங்களில் உயிர் வாழ ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 முதல் 200 லிட்டர் தேவைப்படும் பேருயிரான யானைகள் தாகம் தீர்க்க தண்ணீரை தேடுகின்றன. இவை நீரைத் தேடி ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை சார்பில் வன எல்லைகளில் தண்ணீர் தொட்டிகளை கட்டி அதில் தினசரி நீர் நிரப்பி பராமரித்து வருகின்றனர்.
தற்போது இந்த தொட்டிகளை தேடிவரும் யானைகள் இரு புறமும் காடுகள் உள்ள மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையை கடந்து செல்கின்றன.
பகல், இரவு என எந்த நேரத்திலும் யானைகள் இச்சாலையை கடந்து செல்லும் என்பதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் யானைகளை தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பான தூரத்தில் அமைதியாக காத்திருந் தால் யானைகள் சென்று விடும் என வனத்துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர்.