

ஈரோடு: தமிழகத்திலேயே அதிக அளவாக, ஈரோட்டில் 103 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சராசரியாக 100 டிகிரி வெப்பம் பதிவாகி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக 39.4 டிகிரி செல்சியஸ் (102.92 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக சேலத்தில், 39 டிகிரி செல்சியஸ் (102 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நேற்று பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பாக பயணிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிக வெப்பம் நிலவும் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாத வகையில் 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். குளிர்பானங்கள், துரித உணவுகளைத் தவிர்த்து, நீர்மோர் மற்றும் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் பயன்படுத்த வேண்டும், என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.