

சேலம்/ஈரோடு: சேலம், ஈரோட்டில் 2-வது நாளாக நேற்றும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் கூடுதலாக வெயிலின் தாக்கம் இருந்தது.
தமிழகத்தில் ஓரிரு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் கூடுதலாக பதிவாகிவிட்ட நிலையில், சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. உச்சி வேளையில் அனல் காற்று வீசத் தொடங்கியது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், திறந்த வெளிகளில் நடமாடுவதை மக்கள் தவிர்த்தனர். மேலும், வெயிலை தணித்துக் கொள்ளும் வகையில், பழச்சாறு, இளநீர், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை மக்கள் அருந்தினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் 102.6 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த நிலையில், நேற்றும் வெயிலின் தாக்கம் 100.1 டிகிரியாக பதிவானது. வெயிலின் தாக்கம் சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்டாக மாறியதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோட்டில் நேற்று முன் தினம் 102 டிகிரி வெப்பம் பதிவான நிலையில், 2-வது நாளாக நேற்றும் 102.56 டிகிரி வெப்பம் பதிவானது. வெயிலின் தாக்கத்தால், நண்பகல் நேரங்களில் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. தேர்வுக்கு செல்லும் மாணவர் களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.