Published : 04 Mar 2024 04:00 AM
Last Updated : 04 Mar 2024 04:00 AM

தேன்கனிக்கோட்டை அருகே சனத்குமார் நதிக் கரையோரம் சிறுத்தை நடமாட்டம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே மதனகிரி சனத்குமார் நதிக்கரையோரம் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் வனக் கோட்டத்தில் வறட்சி காரணமாக வன விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்கு வரத் தொடங்கியுள்ளன. இதனிடையில், ஓசூர் வனக்கோட்டத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பது அண்மையில் தெரியவந்தது.

இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அடவிசாமிபுரம் அருகே மதனகிரி முனீஸ்வரன் கோயில் பின்புறம் சனத்குமார் ஆற்றின் கரையோரப் பகுதியில் சிறுத்தை ஒன்று பாறை இடுக்குகளில் மறைந்து இருப்பதை, அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்றவர்கள் நேற்று முன்தினம் பார்த்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சனத்குமார் நதிக் கரையோரம் கண்காணிப்புக் கேமரா பொருத்தினர். இதில், சிறுத்தை அப்பகுதியில் நடமாடுவது கேமராவில் பதிவானது. இதையடுத்து, அச்சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:அண்மைக் காலமாக வனப்பகுதியிலிருந்து அடிக்கடி வெளியேறும் சிறுத்தை, மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளைக் காயப்படுத்தியது. ஏற்கெனவே கடந்த இரு மாதத்துக்கு முன்னர் இப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்தது. வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தும் பயன் இல்லாமல் போனது.தற்போது மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. இதனால், வனப்பகுதிக்குக் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல அச்சமாக உள்ளது. சிறுத்தையை விரைந்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக வனத்துறை யினர் கூறியதாவது: சனத்குமார் நதி பகுதியில் சுற்றும் சிறுத்தையைப் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை பகல் நேரத்தில் கண்காணித்து, கால்நடை மருத்துவர் மூலம் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை பொது மக்கள் இரவு நேரங்களில் கால் நடைகளைப் பாதுகாப்பாக வீட்டின் பட்டிகளில் கட்டி வைக்க வேண்டும். பொது மக்கள் வீட்டின் வெளிய படுத்து உறங்குவதையும், தேவையின்றி வெளியே நடமாடுவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x