

புதுடெல்லி: காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை இமயமலைப் பகுதிகள் எதிகொள்ளவிருப்பதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. ‘க்ளைமேட் ட்ரெண்ட்ஸ்’ என்ற காலநிலை மாற்றத் தாக்கத்தினை ஆராய்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சாமானியர்களும் எளிதில் உணரும்படி பருவம் தவறிய மழை, இயல்பை விட குறையும் குளிர் எனப் பல விஷயங்கள் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த பிப்ரவரி 29 உடன் முடிவடைந்த குளிர்காலம் பற்றிய ஆய்வறிக்கை இன்னும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவிக்கின்றது.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய விவரங்கள் வருமாறு: பிப்ரவரி 29-டன் முடிந்த இந்த ஆண்டின் குளிர்காலம் இயல்பைவிட சற்று கதகதப்பானதாகவே இருந்துள்ளது. தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இவ்வாறாக குளிர்காலம் கதகதப்பானதாக அமைந்துவிட்டதும் காலநிலை மாற்றத்தின் தாக்கமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி 1, 2024 முதல் பிப்ரவரி 29 வரையிலான இந்தியா முழுமைக்குமான சராசரி மழையளவும் 33 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கமான இந்தக் காலகட்டத்தில் 39.8 மில்லிமீட்டர் மழைப்பொழிவு இருக்க வேண்டிய நிலையில், 26.8 மில்லி மீட்டர் அளவே மழை பதிவாகியுள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களே இவ்வாறாக மழைப்பொழிவு, பனிப்பொழிவு என எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புவி வெப்பமயமாதலால் சராசரி உச்சபட்ச வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது தற்போது குறைந்தபட்ச வெப்பநிலையையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. தினசரி பதிவாகும் உயர்ந்தபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் குறைந்து வருகிறது. 1901-ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2024 பிப்ரவரியில் தான் மிக உச்சமான குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால், புவிவெப்பமயமாதல் சராசரி 3 டிகிரி செல்சியஸ் அதிகமானால் இமாலய மலைப் பகுதியில் 90 சதவீதம் பகுதி ஓராண்டுக்கும் மேல் கடுமையான வறட்சியை சந்திக்க நேரும் என்று இந்த ஆய்வு கணித்துள்ளது.
இந்த ஆண்டு குளிர்காலம் இயல்பைவிட கதகதப்பாக அமைந்தது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்துஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், “எல் நினோ தாக்கத்தால் வெப்பமண்டலப் பகுதிகளுக்கு அருகே வெப்பமான காற்று அதிகரிக்கும். அது குளிர் காற்றை வடக்கு நோக்கித் தள்ளும். அதனால், இந்தியப் பிராந்தியத்தில் மேற்கத்திய கலக்கம் குறையும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆனாலும் எல்நினோ போன்ற பெரிய காலநிலை விளைவால் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகப் பதிவாகின என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தியாவில் இந்தாண்டு குளிர்காலம் இயல்பைவிட கதகதப்பாக இருந்தமைக்கு இதுவும் நிச்சயமாக ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.
க்ளைமேட் சேஞ்ச் என்ற காலநிலை மாற்றம் தொடர்பான பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று இந்தியாவில் வெப்ப அழுத்ததால் மனிதர்களுக்கு ஏற்படும் 80 சதவீதம் பிரச்சினைகளை பாரிஸ் ஒப்பந்தத்தின்படி புவிவெப்பமயமாதலை 1.5 டிகிரி என்ற அளவில் கட்டுக்குள் வைத்தாலே சரியாகிவிடும் என்று அந்த ஆய்வு கூறுகின்றது.
இந்த ஆய்வுக் கட்டுரையானது புவிவெப்பமயமாதல் அதிகரிக்க அதிகரிக்க அது ஒவ்வொரு நாட்டிலும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விரிவாக அலசியுள்ளது. இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, எதியோபியா, கானா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்படி, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த நாடுகளில் வறட்சி, அதீத வெள்ளம், பயிர் மகசூல் சரிவு, பல்லுயிர் பெருக்கத்தில் தடை ஆகியன ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் சராசரி 3 முதல் 4 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும்போது இந்தியாவில் மகரந்த சேர்க்கை கூட பாதியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமயமலைகள் மீதான காலநிலை தாக்கம் குறித்து ஜூரிச் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், பனிப்பாறைகள் உருகி உருவாகும் ஏரிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. புவிவெப்பமயமாதலால் இத்தகைய ஏரிகளின் எண்ணிக்கையும், பரப்பளவும், கொள்ளளவும் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
ஆசியாவில் குறிப்பாக இந்துகுஷ் காரகோரம் இமாலயப் பகுதிகளில் (Hindu Kush Karakoram Himalayas - HKH) பனிப்பாறைகள் உருகி உருவான ஏரிகளின் எண்ணிக்கை 1990-களில் 4549 ஆக இருந்த நிலையில் 2015ல் 4950 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறாக பனிப்பாறைகள் உருவி ஏரியாக உருவாவது ஆசியா முழுமைக்கும் ஆபத்து. ஜம்மு காஷ்மீரில் இதுபோன்ற ஏரிகள் 556 இருக்கின்றன. இவ்வற்றில் மிகவும் ஆபத்தானவை பல. அடுத்தபடியான அருணாச்சல் பிரதேசத்தில் 388 ஏரிகளும், சிக்கிம் மாநிலத்தில் 219 ஏரிகளும் உள்ளன. பனிப்பாறைகள் உருகுவதால் நிலச்சரிவு, ஏரிவெடிப்பால் ஏற்படும் வெள்ளப் பெருக்கு என பல சீற்றங்கள் நிகழக்கூடும்.
இத்தகைய பனிப்பாறை உருக்கத்தால் உருவாகும் ஏரிகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்ற நிரந்தர நீர் ஆதாரங்களும் கூட பாதிக்கப்படலாம் என ஜூரிச் பல்கலைக்கழகம் கூறுகின்றது என ஆய்வுக் கட்டுரை மேற்கோள் காட்டியுள்ளது.