மதுரை செல்லூர் கண்மாய் முறையாக சீரமைக்கப்படுமா?
மதுரை செல்லூர் கண்மாயை முறையாக தூர்வாரி புனரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை செல்லூர் கண்மாயை புனரமைக்க தமிழக அரசு கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.4 கோடியே 65 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கியது. இதில் கண்மாயில் கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. கரையின் மீது நடைப்பயிற்சிக்கான பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் கண்மாைய தூர் வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறவில்லை. கண்மாயை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. செல்லூர் கண்மாயில் அதிக நீரை தேக்கும் வகையிலும், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையிலும் 5 அடி ஆழத்துக்கு தூர்வார வேண்டும். கண்மாயை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து செல்லூர் நீர்நிலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த அபுபக்கர் கூறுகையில், கண்மாய்க்கு நீர்வரத்து வாய்க்கால் குலமங்கலம், பூதகுடி, லெட்சுமிபுரம், பனங்காடி, ஆனையூர், ஆலங்குளம், முடக்காத்தான் ஆகிய கண்மாய்களில் இருந்தும், அடுத்ததாக கூடல்நகர் கண்மாயில் இருந்தும் வருகிறது.
செல்லூர் கண்மாயின் நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. அதேபோல் கண்மாயிலிருந்து வெளியேறி வைகை ஆற்றுக்குச் செல்லும் கால்வாயிலும் கழிவுநீரே செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
கண்மாயில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டப்படுகின்றன. கண்மாய் கரை பகுதியில் சிலர் கட்டிட கழிவுகளை கொட்டி, அதன் மீது தற்காலிக கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
கண்மாயை முறையாக சீரமைக்கவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
