பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறமாக மாறிய குளம்
பழநி: பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள சர்க்கரைகவுண்டன் குளம் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். பழநி அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில் கொழுமம் சாலை அருகே சர்க்கரைகவுண்டன் குளம் உள்ளது. இக்குளம் நெய்க்காரப்பட்டி, அழகாபுரி மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் இக்குளத்தில் விடப்படுவதால் மாசடைந்துள்ளது. இதனால் தற்போது தண்ணீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்துவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. பயிர் வளர்ச்சியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி குளத்தின் அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நாள்தோறும் சேகரிக்கும் குப்பையை மலைபோல் குவித்து வைத்துள்ளது. அதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, நோய் பரவும் சூழல் உள்ளது.
குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். குளத்தில் குப்பை கொட்டுவதை பேரூராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நெய்க்காரப்பட்டி பகுதியிலிருந்து வரும் கழிவுகள் குளத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து பச்சை நிறமாக மாறியுள்ளது. குளத்தில் கழிவுநீரை விடுவதையும், குளத்து பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்கவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினர்.
