

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணியில் வீசப்படும் துணிகளில் சிக்கி ஆமைகள் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பது குறித்து இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரிகார பூஜை செய்பவர்கள் துணிகளை ஆற்றில் வீசி செல்கின்றனர். இந்த துணிகளில் சிக்கி நன்னீர் ஆமைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உயிரிழக்கின்றன.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் நதி தூய்மை ஒருங்கிணைப்பாளர் கிரிக்கெட் மூர்த்தி கூறியதாவது: கடந்த ஆண்டு கோடை காலத்தில் பாப நாசத்தில் தாமிரபரணியில் தூர்வாரும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது துணி கழிவுகள், பாட்டில்கள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட 100 டன் கழிவுகள் ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, பொதுமக்கள், மாணவர்கள், நன்கொடையாளர்களின் சீரிய முயற்சியால் இந்த பணி நடைபெற்றது.
இந்த தூய்மைப் பணியை மேற்கொண்டபோது நெஞ்சை நெகிழ வைத்த ஒரு சம்பவத்தை காணமுடிந்ததது, பரிகாரம் செய்து முடித்த பின் பக்தர்கள் தங்களது ஆடைகளை உரிய தொட்டியில் போடாமல், ஆற்று நீரில் போட்டதன் விளைவால் ஆமை உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. தண்ணீரில் கிடந்த ஒரு ஜீன்ஸ் பேன்டில், நன்னீர் ஆமை உள்ளே புகுந்து, வெளியேவர முடியாமல் அப்படியே இறந்திருந்தது. இவ்வாறு அதிகளவில் ஆமைகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் துணிமணிகளில் சிக்கி இறப்பது தொடர் கதையாகி வருகிறது.
இதுபோல் தற்போது விக்கிரம சிங்கபுரம் தாமிரபரணி இரும்பு பாலம் முதல் ஊர்க்காடு வரை நதியில் தூய்மைப் பணி செய்து வருகிறோம். தூய்மைப் பணியில் கழிவுகளை அகற்றும் போது, இறந்து போன ஆமைகளின் ஓடுகளை ஆங்காங்கே காணமுடிந்தது. இவ்வாறு ஆமைகள் மடி வது நீர் நிலைகளுக்கு நல்லதல்ல என்று தெரிவித்தார். நன்னீரில் வாழும் ஆமைகள் 150 ஆண்டுகள் உயிர்வாழும் தன்மையுடையவை. ஆமைகள், அடர்த்தியான தாழம் பூ செடி, தர்பை, புலாத்தி, சேம்பு, செடிகளுக்கு இடையே தான் அதிகளவில் காணப்படுகின்றன.
எனவே இத்தகைய செடிகளை அழிக்க கூடாது. ஓர் ஆமை தன் வாழ் நாளில் ஒரு அணை அளவுக்கு தண்ணீரை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. எனவே தாமிரபரணி ஆற்றில் துணிகளை வீசாமல் உரிய தொட்டிகளில் போடுவதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.