

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக் கணக்கான தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவு நீர் அருகாமையில் உள்ள நிலப்பகுதியிலும், பாலாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கலப்பதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆம்பூர் - வாணியம்பாடி இடையேயுள்ள வடச்சேரி, பாப்பனப்பள்ளி, வடக்கரை, மின்னூர், செங்கிலிகுப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாலாற்றுப் பகுதிகளில் நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, பொதுமக்கள் பாலாற்றுப் பகுதிகளில் பார்வையிட்டனர். அப்போது, ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்து மிதந்தன.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘தோல் தொழிற் சாலைகளிலிருந்து வெளியேற்றப் படும் ரசாயனக் கழிவுகள் பாலாற்றில் கலப்பதால் தான் பாலாற்றில் மீன்கள் அடிக்கடி உயிரிழக்கின்றன, நுரையுடன் கூடிய தண்ணீர் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது மட்டுமின்றி பாலாற்றில் டன் கணக்கில் மணல் திருடப்படுகிறது. ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை, இறைச்சி கழிவுகள் பாலாற்றில் கொட்டப்படுகிறது.
இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், சுற்றுச்சூழல் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பாலாற்றின் நிலத்தடி நீர் மாசடைந்து அதன் தண்ணீர் விஷத்தன்மையாக மாறி வருகிறது. இந்த நீரைப் பருகும் பொதுமக்களுக்குப் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. தற்போது மீன்கள் உயிரிழந்திருப்பதே அதற்குச் சான்று. பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலாற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ஆம்பூர் மாராப்பட்டு பாலாற்றில் மர்மமான முறை யில் மீன்கள் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. அந்த மீன்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாலாற்றில் தோல் கழிவுநீர் கலக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறோம். பாலாற்றில் தோல் கழிவுகள் கலப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு ‘சீல்' வைக்கப்படும்’’ என்றனர்.