

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி அருகே காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த குட்டி யானையை காப்பாற்றி, தாயுடன் வனத்துறையினர் சேர்த்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி வனச்சரகத்தில் உள்ள காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிக்க நேற்று முன்தினம் இறங்கிய குட்டி யானை கால் தவறி கால்வாய்க்குள் விழுந்தது. குட்டியை காப்பாற்ற தாய் யானை நீண்ட நேரம் போராடியும் முடியவில்லை. தாய் யானையின் பிளிறல் சத்தம் கேட்ட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில், வனவர் திலகர், வனக்காவலர்கள் சரவணன், வெள்ளிங்கிரி, முரளி, சின்னநாதன், வனக் கண்காணிப்பாளர் ராசு, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பாலு, நாகராஜ், மகேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று, குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குட்டியின் அருகிலேயே தாய் யானை நின்றிருந்ததால், அதை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் தாய் யானை அங்கிருந்து சென்றது. இதையடுத்து கால்வாயில் இறங்கிய மீட்புக் குழுவினர், பல மணி நேரம் போராடி குட்டி யானையை காப்பாற்றி கரை சேர்த்தனர். வெகு தொலைவில் இருந்து இதைக் கண்ட தாய் யானை, ஓடி வந்து குட்டியை அழைத்துச் சென்றது. அப்போது, குட்டியை மீட்டுக் கொடுத்த வனத் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தாய் யானை தும்பிக்கையை தூக்கி பிளிறியபடி சென்றது. சரியான நேரத்தில் சென்று குட்டி யானையை காப்பாற்றிய வனத்துறை பணியாளர்களுக்கு, அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.